ரமேஷ் கண்ணன் முகநூல் பதிவு :எனது தந்தை கைபேசியில் கூப்பிட்டு என்ன அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடாமே. குழந்தைகள் எல்லாம் இறந்து விட்டனர்களாமே என்று கம்மிய குரலில் கேட்டபோதுதான் அமெரிக்காவில் ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிந்தது. அவர் குரல் உடைகிற அளவில் இருந்தது. சரி நான் கூப்பிடுகிறேன் என்று சொல்லி CNNல் பார்த்தபோதுதான் தெரிந்தது டெக்ஸாஸில் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது என்று. தகவல்களைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்.
உடனே தந்தையை கூப்பிட்டு துப்பாக்கி சூடு நடந்தது டெக்ஸாஸில்தான் என்று சொன்ன உடன் ஆம் நானும் தற்போதுதான் படித்தேன் என்று பதட்டம் தணிந்த குரலில் கூறினார். எனது தம்பியின் மகன்களும் வாஷிங்டன் டி.சியில் தான் பள்ளியில் படிக்கின்றனர்.
ஒரு நாடு ஆராய்ச்சியில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் தொழில் நுட்பத்தில் உயர்ந்து நின்றாலும் உலகின் மிகச் சிறப்பான பல்கலைக்கழகங்களை கொண்டிருந்தாலும் அடிப்படை மனித தன்மையற்ற செயல்கள் அச் சிறப்புகள் யாவற்றையும் புறந்தள்ளி விடும் என்பதற்கு மிகச் சிறப்பான உதாரணம் அமெரிக்கா.
எத்தனை எத்தனை துப்பாக்கி சூடுகள். அதுவும் குழந்தைகளை கொள்ள எப்படி மனம் வந்தது. எல்லா நாடுகளிலும் இது போன்ற மனநிலை பிறழ்ந்த நபர்கள் உண்டு. ஆனால் அமெரிக்காவில் மட்டும் இது மாதிரியான கொடூர சம்பவங்கள் நடப்பதற்கான காரணம் வெகு எளிதானதுதான். எளிதாக கிடைக்கும் துப்பாக்கிகள்.
அமெரிக்காவில் முன்பெல்லாம் துப்பாக்கிக்கான தேவை இருந்திருக்கலாம்.நாம் அதைப் பற்றிய விவாதத்திற்கு செல்ல வேண்டாம். ஆனால் தற்போதய அறிவார்ந்த சமூகத்தில் வெகு ஜனத்திற்கு துப்பாக்கியின் தேவை என்ன? ஆனால் தொடர்ச்சியாக வருகிற ஜனாதிபதிகளும் இந்த துப்பாக்கி கலாசாரத்தில் கைவைக்க தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய அம்சம். National Rifle Association (NRA) இவர்கள்தான் அமெரிக்காவில் இந்த துப்பாக்கி கலாசாரத்தை உயிர்ப்பாக வைத்திருக்கின்றனர், சாம தான பேத என செல்லப்படும் அத்தனை வேலைகளையும் செய்து. அதாவது பணம் மூலமாக காங்கிரஸ் உறுப்பினர்களை கையில் போட்டுக் கொண்டு துப்பாக்கி வைத்திருக்கும் சட்ட திருத்தத்தை வர விடாமல் தடுப்பதற்கு.
இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் 2019ம் வருட கணக்குப் படி, துப்பாக்கியின் மூலமான சாவுகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 38,000த்துக்கும் மேல். இதில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை சுமாராக 24,000க்கும் மேல். சுமார் 14,000க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் வெகு ஜனங்கள் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளில் முதலில் வருவது அமெரிக்கா. (படத்தை பார்க்கவும்) இதில் வேதனையான இன்னொரு விஷயம் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி வைத்திருக்கும் வெகு ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதுதான். மாஸ் ஷூட்டிங் என்று சொல்லப்படும் காரணமேயில்லாமல் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகம்தான் அயோக்கியத்தனத்தின் உச்சம். இதற்கு முழு காரணம் எளிதாக கிடைக்கும் துப்பாக்கிகள்.
இவ்வளவு நடந்த பிறகும் துப்பாக்கி கலாசாரத்தை முடிவிற்கு கொண்டு வராமல் இருக்க ஒரு தனியார் அமைப்பினால் (NRA) முடிகிறதென்றால் அது உண்மையான ஜனநாயகமா. அதை அனுமதிக்கும் நாடு ஜனநாயக நாடா. வெட்கப்படுகிறேன் அமெரிக்க ஜனநாயகத்தை நினைத்து. இவனுங்க லட்சனத்திற்கு பாரதத்திற்கு அறிவுரைகள் வேறு.