பாஜகவில் இருப்பதால் திருந்தி வாழ்வதாக சொன்னார், மாமூல் வசூல் செய்த எங்களை தடுத்தார் அதனால் கொலை செய்தோம் என்ற அதிர்ச்சி தகவலை கொலை செய்தவர்கள் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குற்றவாளிகள் தெரிவித்தது பின்வருமாறு : போலீசாரிடம் பிரதீப் அளித்துள்ள வாக்குமூலம்: சிந்தாதிரிப்பேட்டையில், தந்தை தர்கா மோகன், சகோதரர் சஞ்சய் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறேன். என் மீது, 12 கொலை முயற்சி உட்பட 19 வழக்குகள் உள்ளன. என் சகோதரர் சஞ்சய் மீது, ஒரு கொலை முயற்சி உட்பட ஏழு வழக்குகள் உள்ளன.
எங்கள் குடும்பமே ரவுடிசத்தில் ஈடுபட்டு வருகிறோம்.கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்டில் மாமூல் வசூலிப்பது எங்கள் வாடிக்கை. இதற்கு, பாலசந்தர் முட்டுக்கட்டையாக இருந்தார். இவரது பெரியம்மா மகன் தீபன், எங்கள் பகுதியில் ஜவுளி கடை நடத்துகிறார். இவரிடம் மாமூல் கேட்டபோது தர மறுத்தார்.
நாங்கள் மிரட்டியது குறித்து, பாலசந்தரிடம் தெரிவித்துவிட்டார். இவர் போலீசாரிடம் எங்களை பிடித்துக்கொடுத்தார். நாங்கள் கைதாகி சிறையில்அடைக்கப்பட்டோம். அதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த வசந்தா என்பவரை மிரட்டி, நிலம் அபகரிக்க முயற்சி செய்வதாக, என் தந்தையையும், எங்கள் சகோதரியின் கணவர் தினேஷையும் போலீசில் பிடித்துக்கொடுத்தார்.
நாங்கள் ஜாமினில் வெளியே வருகிறோம். இவர்கள் இருவரும் சிறைக்கு செல்கின்றனர். இதற்கு காரணமான பாலசந்தர் மீது எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.மேலும், எங்களுக்கு மாமூல் கிடைக்கவிடாமல் செய்தார். 'உங்கள் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடமாட்டேன்' என, மிரட்டி வந்தார்; அதன்படி செய்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பதால், 'நானும் ரவுடி தான்; பா.ஜ.க,வில் இருப்பதால் திருந்தி வாழ்கிறேன், என்னிடம் வாலாட்டினால் உங்களை மீண்டும் சிறையில் தள்ளுவேன்' என மிரட்டினார்.இதனால், நானும் என் சகோதரரும் பாலசந்தரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.
இதுபற்றி, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த எங்கள் கூட்டாளி கலைராஜன், 28, மற்றும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜோதி, 30, ஆகியோரிடம் தெரிவித்தோம். பல நாட்கள் நோட்டமிட்டு, பாலசந்தரிடம் பாதுகாவலர் இல்லாத சமயம் பார்த்து வெட்டிக் கொன்றோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.