ஆற்று மணல் விற்பதில் தமிழகம் முழுவதும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரை கையில் எடுத்த அமலாக்கத்துறை தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் சோதனை நடத்தியது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரர்களான வல்லத்திரா கோட்டை முத்துப்பட்டணம் எஸ் ராமச்சந்திரன், கரம்பக்குடி குளந்திரான்பட்டு கரிகாலன் மற்றும் அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், திண்டுக்கல் மாவட்டம் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் பல தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் கடந்த ஜூலை மாதத்தில் அதிரடி சோதனையில் இறங்கியது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகு கடந்த மாதம் மூன்று நாட்களுக்கு மீண்டும் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனைகளில் அமலாக்கத்துறை பல ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்க பணங்கள், முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ள ஆதாரம், அதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போலியான கியு ஆர் கோடுகள் மணல் குவாரிகளில் கொட்டப்பட்டுள்ள அளவில் விகிதமும் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தின் அளவும் வேறுபாடு இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதற்கு அடுத்து சில மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டது லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது சில பணியாளர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதோடு அமலாக்கத்துறை இதுகுறித்து விசாரணை செய்வதற்காகவே 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. மேலும் கனிமவளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில் பல தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நேற்று மீண்டும் முத்துப்பட்டணம் ராமச்சந்திரன் மற்றும் குளந்திரான்பட்டு கரிகாலன் போன்றோரின் வீட்டில் சோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்த சோதனையானது நேற்று இரவு வரை நீடித்து உள்ளது. முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் மற்றும் குளந்திரான்பட்டு கரிகாலன் இவர்களது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தினம் வீட்டிலும் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளது. இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர். கடந்த முறை அமலாக்கத்துறை இவர்கள் வீட்டில் சோதனை நடத்திய பொழுது அவரது மைத்துனர் கோவிந்தன் வீட்டிலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறிப்பிட்டு இந்த மூவர் வீட்டில் மட்டும் அமலாக்கத்துறை மீண்டும் நேற்று சோதனைகள் இறங்கி இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ரத்தினம் வீட்டில் சோதனை இடச்சென்ற பொழுது ரத்தினமும் அவரது இரண்டு மகன்களும் இல்லாத நிலையிலும் ரத்தினனம் மனைவி மட்டுமே பங்களாவில் இருந்துள்ளார் அப்பொழுது அமலாக்கத்துறை தனது சோதனையை கைவிடவில்லை.
காலை 10 மணிக்கு ஆரம்பித்த சோதனையானது பிற்பகல் ஒரு மணி வரை நீடித்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இன்னும் சிலர் இந்த வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வதாகவும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் அனைத்து சோதனைகளையும் முடித்து இறுதி கட்டமாக அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத் துறை நெருங்க போகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்து அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ரெய்டு நடத்திய பொழுது அரசியல் வட்டாரம் முழுவதும் இந்த மணல் குவாரி விவகாரம் நிச்சயமாக துரைமுருகனை குறி வைக்கும் இதன் மூலம் திமுக முக்கிய புள்ளி சிக்கி இந்தியாவில் மற்ற மாநிலங்களில் தற்போது நடைபெற்று வருவது போன்ற திடீர் மற்றும் பிரேக்கிங் நியூஸ் வெளியாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.