24 special

ஜகஜோதி அக்கா சிக்கிய கதை....

jagajothi
jagajothi

ஒவ்வொரு இளைஞர்களுக்குமே அரசு வேலை என்பது பற்றிக்கொள்ள வேண்டிய கனவு,  அரசு வேலை கிடைத்த பிறகு மிக உயர்ந்த பொறுப்பிலோ அல்லது சாதாரண பொறுப்பில் அமர்த்தப்பட்ட பிறகு அவர்களுக்கு பழக்கமா இல்லை சுற்றி இருக்கும் சூழ்நிலை அவர்களை மாற்றி விடுகிறதா என்பது தெரியவில்லை ஆரம்பத்தில் மிகவும் நேர்மையாக ஊழல் அற்ற கரை படியாத அரசாங்க ஊழியர் ஆக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலப்போக்கில் அந்த மனப்பான்மையை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி அனைத்து அரசு ஊழியர்களையும் அப்படி கூறி விட முடியாது இன்னும் பல அரசு ஊழியர்கள் நேர்மையாகவும் ஊழலுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். ஆனால் சினிமாவில் காட்டப்படும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கரைபடிந்த கையாகவும் அவரை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஹீரோ முன்கூட்டியே லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு பிறகு அந்த அரசு ஊழியரிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவர் பணத்தைக் கேட்க ஹீரோ அந்த பணத்தை கொடுக்கும் பொழுது கையும் களவுமாக மாட்டும் வகையிலான சீன்கள் அரங்கேறி இருக்கும். 


இவற்றை பல சினிமா காட்சிகளில் பார்த்திருப்போம். அதேபோன்று நிஜத்திலும் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் அரசு கட்டுமான பணிகளை கங்காதர் என்னும் ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்து செய்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பழங்குடியினர் நல வாரியத் துறை சார்பில் நிஜாமாபாத்தில் ஆண்கள் அரசு விடுதியை கட்டினார். இதனை அடுத்து ஹைதராபாத் காஜுலா ராமாரம் பகுதியில் புதிதாக பழங்குடியினர் பிரிவினருக்கான அரசு விடுதி கட்டும் ஒப்பந்தத்தையும் எடுத்தார். இந்த நிலையில் கங்காதர் ஏற்கனவே கட்டி முடித்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கிடுமாறு ஹைதராபாத் எஸ்டி நலப் பிரிவு வாரியத்தின் செயற்பொறியாளராக உள்ள ஜகஜோதிடம் கேட்டுள்ளார். அதற்கு செயற்பொறியாளர் தற்போது நீங்கள் இரண்டு டெண்டர்களை எடுத்து உள்ளீர்கள் அதனால் ஒரு லட்சம் கொடுத்தால் தான் பில் தொகையை வழங்குவேன் என்று கூற ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கங்காதர் புகார் கொடுத்தார். 

இதனை அடுத்து ஜகஜோதி கேட்ட பணத்தை எடுத்துக்கொண்டு கங்காதர் பழங்குடியினர் நல வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த செயற்பொறியாளர் ஜெகஜோதிடம் ஒரு லட்சம் தொகையிலிருந்து சற்று குறைக்கும் படி கேட்டுள்ளார் இதனால் ரூபாய் 84 ஆயிரம் வழங்குமாறு ஜெகஜோதி கூறியதற்கு பணத்தை கங்காதர் கொடுக்க ஒத்துக் கொண்டது போல் நடித்து பணத்தை கொடுக்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜகஜோதியை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 65 லட்சம் ரூபாய் ரொக்கமும் 3.64 கிலோ எடையில் தங்க நகைகளையும் சில சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மொத்தம் ஜகஜோதிக்கு என்று 15 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். 

இவை அனைத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்து ஜகஜோதியை கைது செய்ய முற்படும்பொழுது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அலறி உள்ளார்! உடனே அவரை ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை கொடுத்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை ஜகஜோதியை கைது செய்து ஹைதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். இந்த செய்தி தற்போது இணையங்களில் வைரல் ஆகி வருகிறது ஏனென்றால் சினிமா பாணியில் ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறை கையும்களவுமாக பிடித்திருப்பதும் அதற்கு அடுத்து அவரும் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரைப்படங்களில் நடப்பது போன்று இருக்கிறது என இதற்கு கமெண்டுகள் முன்வைக்கப்படுகிறது.