சென்னை மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல் சித்தேரி பகுதியில் ஏரியை ஒட்டி நடைபாதை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருகில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஜோடி, ஜோடியாக வந்து பொழுதை கழிப்பதை வாடிக்கையாகி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ஒரு ஜோடி ஒன்று சித்தேரி பகுதிக்கு வந்தது. அப்போது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் இறங்கி வந்து அப்பெண்ணின் ஆண் நண்பரை சரமாறியாக தாக்கினர். அப்பெண் அவர்களிடம் கெஞ்சியும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை.
பின்னர் அடித்துவிட்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதன் பிறகு அப்பெண்ணின் ஆண் நண்பர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினார். தலை முடியை பிடித்து இழுத்து அடித்தார்.
அதே போல் மற்றொரு ஜோடி ஒன்று வந்தது. அப்பெண்ணுடன் வந்த ஆண் நபர் அப்பெண்ணை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நடைபாதை பாலத்தின் மீதிருந்து தூக்கி தள்ளி விட முயன்றார்.
இதனை கண்ட பகுதிவாசிகள் சத்தம் போடவே அங்கிருந்து சென்றனர். இந்த இடத்தில் சிலர் ஒன்று கூடி மது அருந்துவது, தாக்குவது என தொடர் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இளம் ஜோடிகள் வருகிறார்கள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை இது என்ன சுற்றுலா தளமா ஒரு கட்டத்தில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் சித்தேறி பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.