24 special

மக்களின் வெறுப்பை மறைக்கவே திமுக சனாதனத்தை கையில் எடுத்துள்ளது.....இபிஎஸ் சாடல்!

mkstalin
mkstalin

அதிமுகவின் 52ஆவது தொடக்க விழாவையொட்டி நேற்று இரவு சங்கரன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.


திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் ரிப்பன் வெட்டுகிறார். சங்கரன்கோவில் சுற்று வட்டாரப்பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதியையும் திமுக அரசு செய்து தரவில்லை என்று விமர்சித்தார். 

தொடர்ந்து, விடியா திமுக ஆட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. சளி தொல்லைக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றால் வெறிநாய் கடிக்கு ஊசி போடுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து சம்பவத்திற்கும் குண்டக்க மண்டக்க பதில் கூறுகிறார்.  தென்காசி மாவட்டம் திருநெல்வேலியில் இருந்து அதிமுக ஆட்சியில் மாவட்டமாக உருவாக்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலகங்களை கட்ட அதிமுக நிதி ஒதுக்கீடு செய்தது. இப்போது அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக சங்கரன் கோவிலில் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, மகளிர் உரிமைத்திட்டம் தொடர்ந்து மக்களுக்கு தருவதில்லை. இதனால்  பொதுமக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனை மறைக்கவே உதயநிதி ஸ்டாலின் ‘சனாதனம்’ என்று சொல்லி திசைத்திருப்புகிறார். ஊழல் செய்வதற்கு திராவிட மாடல் என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் இந்த அரசின் தாரக மந்திரம். அதிமுக தொடந்து அழுத்தம் கொடுத்ததால்தான் தற்போது ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி உள்ளது. அது கூட அனைவருக்கும் கொடுக்கவில்லை என்று கூறினார். 

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், கஞ்சா கொள்ளை, கொள்ளை என் திமுக ஆட்சியில் தலை தூக்கி நின்று வருகிறது. இன்று பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. உங்களை போன்று அதிமுக மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடிந்ததா?, முதலில் யார் பிரதமர் என்று கூறுங்கள். 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை படுதோல்வி அடைய வைக்க வேண்டும். அதற்காக எறும்பு மற்றும் தேனீக்கள் போன்று சுறுசுறுப்பாக தேர்தலில் களப்பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.