24 special

திரிபுரா அரசியலில் திடீர் திருப்பம்...! முதலமைச்சர் ராஜினாமா..!

Tripura bjp
Tripura bjp

திரிபுரா : இந்திய அரசியல் கட்சிகளில் பிஜேபி தனித்துவமான அணுகுமுறையை கொண்டிருக்கிறது. அதன் நிர்வாக தலைவர்களை நியமிக்கும்போது அடிமட்ட தொண்டர்களில் ஒருவரையோ அல்லது யாருக்கும் அவ்வளவு பரிச்சயம் இல்லாத ஒருவரையோ நியமிப்பது அதன் வழக்கம். அதேபோல கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் இதுவரை கட்சியை பற்றியோ அல்லது அதன் தலைவர்களை பற்றியோ விமர்சிப்பது இல்லை என்பது பிஜேபியின் சிறப்பு.


கடந்த வருடம் கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா திடீரென ராஜினாமா செய்தார். அவர் மீது தலைமை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டாலும் அந்த குற்றச்சாட்டுக்களை அறவே மறுத்த எடியூரப்பா தனது பதவியை எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இன்றி ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார்.



இந்நிலையில் திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் டெப் தனது ராஜினாமா கடிதத்தை திரிபுரா கவர்னரான சத்யதேய நரேன் ஆர்யா அவர்களை ராஜ்பவனில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 25 வருடமாக கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருந்த திரிபுராவை 2018ல் முதலமைச்சராகி பிஜேபி கோட்டையாக மாற்றிக்காட்டினார் பிப்லப் குமார்.

தனது ராஜினாமா குறித்து பிப்லப்கூறுகையில் " கட்சி தலைமை மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறது. அதனால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இன்னும் ஓராண்டு பதவிக்காலம் மீதமிருந்த நிலையில் முதல்வரின் ராஜினாமா உட்கட்சி பூசலாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

பிஜேபி மாநில பொறுப்பாளர் வினோத் சோனகர் அவசர சந்திப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துள்ளார். மேலும் ஏற்கனவே மூத்த தலைவர்கள் பூபேந்தர் யாதவ் மற்றும் வினோத் தாவ்டே திரிபுராவில் கூடாரமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம் என மாநில பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.