நீட் தேர்வில் பொய் சொல்லி அதன் மூலம் மாணவர்களும், பெற்றோர்களும் இறந்தார்கள் என்றால் அந்த தற்கொலைக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என ஆர்.பி.உதயகுமார் பரபரப்பான குற்றம்சாட்டியுள்ளார்.நீட் தேர்வு தொடர்பாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் அமைச்சர் உதயநிதிக்கு கேள்வி எழுப்பி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், கருத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகையால் கடந்த இரண்டு நாட்களாக மதுரை அல்லோலப்பட்டு வருகிறது. மதுரை பரபரப்புக்கு பஞ்சமில்லை ஆனால் வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதிஸ்டாலின் தற்போது, ரெண்டரை ஆண்டு காலம் கையெழுத்து போடாமல், தற்போது மதுரையில் நீட்டை ரத்து செய்ய ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறுவோம் என்று கூறுகிறார். என்னை கையெழுத்து போட தயாரா என்று சவால் விட்டு உள்ளார்.
அவரின் பக்குவபடாத கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். நீட் தேர்வை ஒரே கையெழத்து மூலம் ரத்து செய்வன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஒரு கோடி பேரின் கையெழத்து தேவை என்பதை நீங்கள் கூறுவது, இதன் மூலம் திமுக தோல்வி அடைந்து விட்டது என்று தோல்வியை ஒப்புக்கொள்ள தயாரா? நீட் தேர்வு குறித்து ரகசியம் கேட்டால், எய்ம்ஸ் ரகசியத்தை வெளியிட தயாரா என்று பச்சைக் குழந்தை போல் கேள்வி எழுப்பி உள்ளார். அதிகாரத்தில் நீங்கள் தான் உள்ளீர்கள், கேட்கும் இடத்தில் நாங்கள் உள்ளோம். ஐந்து முறை தமிழகத்தில் திமுக ஆட்சி செய்த பொழுது எய்ம்ஸ் குறித்து எந்த கோரிக்கையை வைத்து இருக்கிறீர்களா? இன்றைக்கு நீட் தேர்வில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது இதற்கு நீங்கள் சொன்ன ஒரே கையெழுத்தில் நீட் ரத்து செய்வோம் என்ற கூறிய வாக்குறுதி தான் காரணம் இதனால் மக்கள் உங்கள் மீது கோபத்தில் உள்ளனர். நீங்கள் கேட்ட எய்ம்ஸ் ரகசியத்தை நான் கூறுகிறேன், நீங்கள் ஒருமுறை கூட எய்ம்ஸ் தேவை என்று குரல் கொடுக்கவில்லை, ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில் இதற்காக 224 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது இதற்காக 1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் கட்டும் இடத்தில் மண் பரிசோதனைகாக்க நாக்பூருக்கு செய்யப்பட்டு இது கட்டிடத்திற்கு ஏற்றது என்று அனுமதி பெறப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய மருத்துவ கட்டுமான அதிகாரிகள் பார்வையிட்டு 2018 ஆம் ஆண்டு கட்டிட அனுமதியை வழங்கினர். அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பாரதப் பிரதமரை அழைத்து வந்து எடப்பாடியார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனம் இடத்தை ஆய்வு செய்தது .அதனைத் தொடர்ந்து மேலும் 5 ஏக்கர் நிலம் சாலை பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து மத்திய சாலை நிதி திட்டத்தின் மூலம் 21 கோடியே 20 லட்சம் மதிப்பில் 6.4 கிலோமீட்டரில் சாலைகள் அமைத்தும், 10 கோடியில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இந்த ரகசியத்தை அறியாதவர் எய்ம்ஸ் கல்லை தூக்கிக் கொண்டு ரகசியத்தை செல்ல முடியுமா என்று கூறி வருகிறார். ஆளும் கட்சியாக உள்ள நீங்கள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து கொண்டு வர வேண்டாமா ?நீங்கள் பேசுவது மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதுநீட் தேர்வை ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்கும் நாடகத்தை மக்கள் ஒருபோதும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். இந்த ஒரு கோடி கையெழுத்து ரகசியம் என்ன ? இதன் மூலம் உதயநிதி தோல்வியை ஒப்புக்கொள்ள முன் வருவாரா? மீண்டும் நீட் தேர்வில் பொய் சொல்லி அதன் மூலம் மாணவர்களும், பெற்றோர்களும் இறந்தார்கள் என்றால் அந்த தற்கொலைக்கு உதயநிதி ஸ்டாலின் காரணம். தற்கொலையை தடுத்து நிறுத்துவதற்கு நீட் தேர்வை தோல்வியை திமுக ஒப்புக்கொள்ள வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.