![Eps. Udhayanithi stalin](https://www.tnnews24air.com/storage/gallery/bQreUpZ5TTFnATbTlp7Uto0zpFAdVGDcFGW1aT8T.jpg)
நாடு முழுவதும் உள்ள கட்சியினர் நாடளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினரிடம் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. முதல் கட்சியாக திமுக தனது பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கியது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது கூட்டணியின் முதல் பரப்புரையை திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார். இதில் பேசிய எடப்பாடி உதயநிதியை பங்கம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கருப்பையா, சேலம், விக்னேஷ், கோவை தொகுதி சிங்கை இராமச்சந்திரன் உள்ளிட்ட 40 வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். மக்களுக்கு தெரியும். தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுக-விற்கு இடையேதான். விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். ஆனால், திமுக அப்படியல்ல.. குடும்பத்திற்காக பாடுபடும். திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திமுக அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன்.
வரும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், அவர்கள் மீது நடவடிக்கை பாயும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிமுக அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை என்று பேசினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி உதயநிதியை சீண்டியுள்ளார். அதாவது, எப்போது பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொள்கிறார். அதைத்தான் மூன்று வருடங்களாக காட்டிக்கொண்டிருக்கிறார். செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை. விளம்பரத்திற்காக செங்கல்லை காட்டுகிறார். ஸ்கிரிப்ட்டை மாத்துங்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திமுக எம்.பி-க்கள் என்ன செய்தார்கள்? என சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
எப்படி 2021 சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்று செங்கலை காட்டி பிரச்சாரம் செய்து வந்தார். அதனால் மக்கள் திமுகவுக்கு வாக்கு அளித்து வெற்றி பெறச்செய்தனர். அதையே திரும்ப கையில் எடுத்து தற்போது லோக்சபா தேர்தலுக்காக பயன்படுத்துவதால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.