2009 ஜூலை மாதம் நடிகர் விஜய்'யால் தொடங்கப்பட்டது விஜய் மக்கள் இயக்கம், தனது ரசிகர்களின் நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். 2010 ஆம் ஆண்டில் விஜயின் காவலன் திரைப்படத்திற்கு முதலில் பல எதிர்ப்புகளை திமுக செய்து வந்த நிலையில் அதிமுகவுடன் மக்கள் இயக்கம் ஒருங்கிணைந்து திமுக அரசை தாக்கி வந்தது.
பிறகு 2011ல் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாகப்பட்டினத்தில் முதல் அரசியல் கூட்டத்தை மக்கள் இயக்கம் நடத்தியது. மேலும் அதே ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றியடைந்தது. அப்பொழுது அதிமுக வெற்றி பெற உதவியதில் மகிழ்ச்சி என விஜய் கூறினார்.
பிறகு விஜயின் மக்கள் இயக்கம் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தது, படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிற மாணவர்களுக்கு படிக்க பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது மேலும் பல இடங்களில் உணவு பந்தல் அமைத்து உணவுகளும் பரிமாறுதல், விலையில்லா பால், முட்டை, ரொட்டி போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்குதல் என விஜயின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை இன்றளவும் செய்து கொண்டு வருகின்றனர்.
இதன் பின்னணியில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் இருப்பதாக பலரும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளனர். 2006 முதல் 2011 வரையிலான திமுக அரசு ஆட்சி செய்த காலத்திலேயே அரசியலில் பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் விஜய். அதற்குப் பிறகு 12 ஆண்டுகள் விஜயின் எந்த படம் வெளி வந்தாலும் அதில் அரசியல் தலையீடு கண்டிப்பாக இருக்கும். அந்த வரிசையில் வாரிசு படமும் சிக்கியது, பல வருடங்களுக்குப் பிறகு விஜய் அஜித்தின் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. விஜய் நடித்த வாரிசு படம் தயாரிப்பாளர் பைடிபள்ளியாலும், அஜித் நடித்த துணிவு படம் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனத்தாலும் வெளியிடப்பட்டது.
துணிவு படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் வெளியிட்டதாலோ என்னவோ! வாரிசு படத்திற்கு அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை, மேலும் வாரிசு படம் விஜய் நினைத்திருந்த அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை இதற்க்கு திரையரங்குகள் அதிகம் ஒதுக்கப்படாததே காரணம். தொடர்ந்து தனது படங்களின் வெளியீட்டில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற காரணத்தினால் விஜய், விரைவில் அரசியல் இறங்கியாக வேண்டும் என்பதால் தனது மக்கள் இயக்கத்தின் பணிகளை துரிதப்படுத்திவிட்டார்.
முதல் காரியமாக இரண்டு தினங்களுக்கு முன்பு அம்பேத்கரின் பிறந்த நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை போடும் நிகழ்வை ஏற்பாடு செய்தது விஜய் தரப்பு ஆனால் அதற்கு அனைத்து மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்திலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுங்கட்சியால் இந்த அரசியல் நோக்கத்துடன் இந்த அனுமதி மறுப்பு நடந்துள்ளது என விஜய் தரப்பு கடும் கோபத்தில் இருந்தது.
இதனையடுத்து, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் ஈரோட்டில் இருக்கும் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்தார் .
மேலும் அந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உத்தரவின் படியே தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதாக அவர் கூறினார், இதற்கு அடுத்ததாக விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறுமா என்று கேள்வி எழுப்பியதற்கு 'இது பற்றி விஜய் அறிவிப்பார்' என்று சொல்லி முடித்தார் புஸ்ஸி ஆனந்த். இதன் மூலம் விஜய் அரசியலில் நுழைவார் என்பது நிச்சயமாக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 22 ஆம் தேதியான தனது பிறந்தநாளன்று விஜய் தனது அரசியலில் ஈடுபடுவதை அறிவிக்க உள்ளார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே தனது மக்கள் இயக்கத்தின் செயல்களையும் அவர் துரிதப்படுத்தி உள்ளார்.