24 special

ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்கமாட்டோம்..! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்..!

Rajnath singh
Rajnath singh

புதுதில்லி : தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா தனது ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என கூறியதுடன் சீனா மற்றும் இந்தியாவுக்கிடையேயான கிழக்கு லடாக் அருணாச்சலப்பிரதேச எல்லை மற்றும் நேபாள எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள்  பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்க்கப்படும் என கூறியுள்ளார்.


மேலும் அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில் " இந்தியாவின் ஒற்றுமை அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் எதிரிகள் யாராக இருந்தாலும் இந்தியா தக்க பதிலடி பலமடங்காக அளிக்கும். ஏனெனில் இந்தியா பலவீனமாக இல்லை. எங்களது அரசியல் எதிரிகள் (காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளை குறிப்பிட்டார்) உண்மைகளை முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

1962 சீன இந்திய போரின்போது என்ன நடந்தது என நான் கூறவிரும்பவில்லை. ஆனால் நாங்கள் இருக்கும்போது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு இந்திய நிலத்தின் ஒரு அங்குலம் கூட செல்லாது என்பதை ஒரு பாதுகாப்பு மந்திரி என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன். நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசத்தின் பெருமையிலும் நற்பெயரிலும் எந்தவிலைக்காகவும் சமரசம் செய்துகொள்ளாது.

முன்புபோல இந்தியா பலவீனமான நாடாக இல்லை. சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளதை உலகம் உற்று கவனித்து வருகிறது. இந்தியா உலகின் எந்த ஒரு நாட்டையும் தாக்கவில்லை. மற்றவர்களின் ஒரு அடி நிலத்தை கூட கைப்பற்றவில்லை. இந்தியாவிற்கு அச்சுறுத்தல் எனில் எந்த நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது" என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.