24 special

கேப்டன் விஜயகாந்துக்கு பிரேம லதா செய்த சிறப்பான சம்பவம்...!

vijayakanth preamaladha, parthiban
vijayakanth preamaladha, parthiban

நேற்று விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் பிரேமலதா மைக்கை பிடித்து பேசிய சம்பவமும் இறுதி நொடி வரை அவர் செய்த செயல்களும் தற்போது பிரேமலதா குறித்து இது நாள் வரை விஜயகாந்த் விஷயத்தில் ஆதங்கத்தில் இருந்த பலரை அட இந்த அம்மாவையா நாம பேசினோம் என பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,  பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகும் என நினைத்த பிரேமலதா மைக்கை வாங்கி அனைவரும் வாகனங்கள் செல்ல வழிவிடுங்கள் என கோரிக்கை வைத்ததுடன் தனது கணவரின் உடல் அருகே வாகனத்தில் அமர்ந்த படி கண்ணீர் சிந்திய படி வந்தது பொதுமக்கள் மனதில் பெரும் வேதனையை உண்டாக்கியது. இந்த நிலையில் தான் பிரேமலதா குறித்து தற்போது இணையத்தில் பதிவு ஒன்று கடும் வைரலாக பரவி வருகிறது. 


விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது பிரேமலதா விஜயகாந்த் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார் நடிகர் பார்த்திபன்.விஜயகாந்த் உடல்நிலை மோசமான பிறகு அவர் மனைவியாக இருந்து மட்டுமல்ல, ஒரு தாயாக இருந்து  அவரை பார்த்துக்கொண்டார், இல்லையென்றால் இன்று நிகழ்ந்திருக்கும் இந்தச்சோகம் முன்னமே நிகழ்ந்திருக்கும் என்றார். யோசித்துப்பார்த்தால் அது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது. பிரேமலதா மீது எனக்குமே விமர்சனங்கள் இருக்கிறதுதான். தள்ளாடியபடி விஜயகாந்த் அமர்ந்திருக்க அவசரக்கோலத்தில் பொதுச் செயலாளர் பதவியேற்றுக் கொண்டதை பார்த்தபோது எனக்குமே பிடிக்கவில்லைதான். ஆனால் அரசியல், கட்சி என்று வரும்போது அதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் சில முடிவுகளை அவசரகதியில் எடுக்கவேண்டி இருக்கிறதுதான். இப்படிப்பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளில் நடந்தேறிய அபத்தமான உதாரண நிகழ்வுகளையும் நினைவுகூற முடியும்.

ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு விஜயகாந்தை கண்ணை இமைபோல  பார்த்துக்கொண்டது பிரேமலதாதான் என்பதை மறுக்கமுடியாது. பார்த்திபன் சொன்ன அந்த மனைவி தாயாக மாறும் தருணத்தை நெகிழ்ச்சியோடு நான் பார்க்கிறேன்.ரசிகர்கள், தொண்டர்கள், நலம் விசாரிப்பவர்கள், சொந்த பந்தங்கள் என்று ஆயிரமாயிரம் உறவுகள் ஒருவருக்கு அமையலாம். நாம் அவதூறான வார்த்தைகளை காற்றில் உதிர்த்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கப் போய்விடலாம். ஆனால் அன்பான மனைவி ஒருத்திதான் நிழல் போலிருந்து ஒரு ஆண்மகனை பார்த்துக்கொள்ள முடியும். அதுவும் இப்படியொரு உடல்நலக்குறைவு ஏற்படும்போது அதை சவாலாக ஏற்றுக்கொண்டு குடும்பத்தையும் கூடவே கட்சியையும் சேர்த்து பார்த்துக்கொள்ள எப்படிப்பட்டவொரு நெஞ்சுரம் வேண்டியிருக்கிறது!அவர் கண்ணசைவு, கையசைவைப் புரிந்துகொள்வதில் ஆரம்பித்து தினசரி பணிவிடைகள், மருந்து மாத்திரைகள் என்று ஒரு குழந்தையைப் போல பிரேமலதா அவரைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். 

ஒவ்வொரு அசாதாரண சூழலிலும் பதறியபடி மருத்துவமனைக்குச் சென்றிருக்க வேண்டும். சிங்கம் போல சீறிக் கொண்டிருந்த ஒருவரை எப்படியவாவது பழையபடி மீட்டுக் கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற அக்கறையும் விடாமுயற்சியும் கட்டிய மனைவியை விட வேறு யாருக்கு இருந்துவிடப் போகிறது!அனைத்தையுமே அவர் முயன்றுதானிருக்கிறார். அவ்வப்போது விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா சொல்லிவந்த பேட்டிகளைக் கவனித்தே வந்திருக்கிறேன். அவரது பேச்சில் தெளிவான பார்வையும், கொஞ்சமான நம்பிக்கையும் இருந்தே வந்தது. இரு மகன்களுக்கும் இன்னமும் திருமணம் கூட ஆனதாய்த் தெரியவில்லை. குடும்பத்தின் மொத்த கவனமும் விஜயகாந்த் மீதும் அவரது உடல்நலனின் மீதுமே இதுநாள்வரை படிந்து வந்திருக்கிறது. மனைவியாக தாயாக மூன்று ஆண்மகன்களை ஓய்வறியாது சுமந்து வந்திருக்கிறார் பிரேமலதா. இந்த விஷயத்தில் அவரை மட்டுமல்ல, அவர்போல் குடும்பத்தைச் சுமந்து வாழும் பலகோடி மனைவிமார்களை மிகுந்த மரியாதையோடு நான் பார்க்கிறேன் என இணையத்தில் தற்போது பலரும் பிரேமலதா குறித்த உண்மையான மனதை அறிந்து கொண்டதாக பதிவிட்டு வருகின்றனர்.