ஒரு பக்கம் அமலாக்கத்துறை அடித்து ஆடும் நிலையில் மறுபக்கம் செந்தில் பாலாஜிக்கு வேறுவிதமாக நெருக்கடி ஏற்பட்டு அரசியல் வாழ்வே அஸ்தமிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று சட்டவிரோத பணம் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் இதனை அடுத்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் என். ஆர். இளங்கோ மற்றும் கபில்சிபல் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். மேலும் இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் இருவரும் இரு விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். அதாவது நீதிபதி ஜெ நிஷா பானு, செந்தில் பாலாஜியை கைது செய்வது சட்டவிரோதம், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி டி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜி கைது செய்தது சட்டவிரோதமானது அல்ல அவர் உடல்நலம் தேறிய பின்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தார்.
இரு வேறு தீர்ப்புகளால் எது சரியானது என்பதை முடிவு செய்வதற்காக மூன்றாவது நீதிபதியாக சிவி கார்த்திகேயனை நியமித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கிற்கான விசாரணை மற்றும் தீர்ப்பை விடுமுறை நாளான சனிக்கிழமை ஒரே நாளில் விசாரித்து முடித்துக் கொள்ளலாம் என்று நீதிபதி கூறியதற்கு இரு வழக்கறிஞர்களும் ஒப்புக்கொண்டு, இந்த தீர்ப்பின் முடிவில் அமலாக்கத்துறை வசமே இந்த வழக்கு சாதகமாக மாறும், செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லுவார் என்று சட்ட வல்லுநர்கள் கூறி வரும் நிலையில் மேலும் வேறு ஒரு விவகாரத்தில் வசமாக சிக்கியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி!
செந்தில் பாலாஜியின் மீது மற்றொரு மோசடி புகார் ஒன்று பதியப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக இருந்த பொழுது, டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு, ஊழல், கூட்டு சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் புகார் அளித்துள்ளது. அதாவது 2021 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த முறைகேட்டால் தமிழக அரசுக்கு ரூபாய் 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மின்வாரிய அதிகாரிகள் நிதிக்கட்டுப்பாளர் காசி, ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள், ஐஏஎஸ் அதிகாரி ரமேஷ் லகோனி மற்றும் இந்த ஊழலில் ஈடுபட்ட பிற அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதும், மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு வந்தவுடன் அந்த விசாரணையும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு அதற்கான தீர்ப்பும் வழங்கப்படும்! இது மட்டுமில்லாமல் அமலாக்கத்துறை விரைந்து செந்தில் பாலாஜியை தன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக மேல்முறையீடுகளையும் பதியுள்ளதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் செந்தில் பாலாஜி இருந்து வருகின்ற சமயத்தில் திடீரென்று அறப்போர் இயக்கம் செந்தில்பாலாஜியின் ஊழலை பற்றி தெரிவித்து புகார் அளித்திருப்பது மேலும் அவரை பலவீனப்படுத்தும் என்றே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜியை பிடித்தால் வழக்கு கைக்குள் வந்துவிடும் என்ற நிலையில் அமலாக்கத்துறை இருக்கும் சமயத்தில் இப்படி புது புகார் எழுந்துள்ளது அமலாக்கத்துறைக்கே சாதகமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்! காரணம் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக குவிவதால் அதனை நீதிமன்றத்தில் காரணமாக வைத்து செந்தில்பாலாஜியை எப்படியும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும் அமலாக்கத்துறை என்றே கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்!