உலகில் நிகழ் காலத்தில் கடன் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையான பதிவின் மூலம் விளக்கியுள்ளார் சரவணபிரசாத் பாலசுப்ரமணியம்.. அவர் தெரிவித்த நகைச்சுவை பதிவு பின்வருமாறு :-இன்று உலகத்திலேயே மிகப்பெரிய ஒரு சங்கம் அமைக்க முடியுமென்றால் அது "சமூகவலைதளத்தில் பழகியோரை நம்பி கடன் கொடுத்து ஏமாந்தோர் சங்கம்" தான் என்பது மிகக் கசப்பான உண்மை.
இந்த சமூக வலைத்தளத்தில் நம்மிடையே பழகுவோர் நம்மை நேரடியாக பார்த்திருக்கலாம், பார்க்காமல் இருக்கலாம். தொலைபேசியில் பேசி இருக்கலாம், பேசாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நம்பிக்கையின் பெயரில் நம்மிடம் கடன் கேட்பார்கள். இப்படி கடன் கேட்போரில் ஒரு சில வகைகள் உண்டு.
வாங்கிய கடனை சொல்லிய நேரத்தில் திருப்பிக் கொடுப்போர் ஒரு வகை.வாங்கிய கடனை சொல்லிய நேரத்தில் தராமல் சிறிது இழுத்தடித்து கேட்டதற்கு பிறகு கொடுப்போர் ஒரு வகை.வாங்கிய கடனை நீங்கள் கேட்பதற்கு முன்னாலேயே நான் உங்களிடம் இவ்வளவு வாங்கி இருக்கிறேன் தர முடியாமைக்கு வருந்துகிறேன் சீக்கிரம் தந்து விடுகிறேன் என்று சொல்லியே காணாமல் போனவர்கள் ஒரு வகை.
கடன் வாங்கி அடுத்த நொடி உங்களை ப்ளாக் செய்வதுடன் நம்பர் எல்லாம் மாற்றி அட்ரஸ் மாற்றி, ஆதார் கார்டு கூட மாற்றும் நபர்கள் ஒரு வகை.இதில் எதிலுமே சேராத ஒரு வகை இருக்கிறது..அது என்ன வகை என்றால் உங்களுடனே இருப்பார், உங்களிடம் நன்றாக பேசுவார் உங்களிடம் ஒரு சிறிய தொகையை வாங்கி இருப்பார். ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப் பட்டதே இல்லை. சிறிய தொகை தானே என்று நாமும் கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கை அவருக்கு.
ஆனால் அதே சமயம் நம்முடனும் அவருடனும் தொடர்பில் இருக்கும் மற்ற நண்பர்களிடம் இந்த விஷயத்தை நாம் பேச ஆரம்பிக்கும் போதுதான், அவர் நம்மை சுற்றியிருக்கும் அனைவரிடமும் இது போல சிறிய மற்றும் பெரிய தொகையை கடனாக பெற்று இருக்கிறார் என்றும், அந்த தொகை அனைத்தையும் கூட்டிப் பார்த்தால் அது கிட்டத்தட்ட சில லட்சங்களைத் தாண்டி இருக்கும் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைவோம்.
கவுண்டமணி செந்தில் பிளாஷ்பேக் காட்சியில் வருவது போல் நீயா?? நீங்களா?? இவ்வளவு கொடுத்தீங்களா?? அவ்வளவு கொடுத்தீர்களா?? என்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கேட்டுக்கொள்வோம்..ஆனால் கடன் வாங்கிய புண்ணியவானோ இதைப்பற்றி மூச்சே விட மாட்டார். யாரிடமும் அதைப்பற்றி பேச மாட்டார். பல சந்தர்ப்பங்களில் , ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி உதாரணத்திற்கு உடல்நிலையை காரணம் காட்டி, குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட அசம்பாவிதமும் இதைப்போல் ஏதாவது ஒரு காரணம் காட்டி ஆங்காங்கே சிறுசிறு சில்லறை தொகையை வாங்கிக் கொண்டே இருப்பார். ஆனால் திருப்பிக் கொடுப்பதற்கான அறிகுறி எங்கேயுமே தென்படாது.
அதற்காக இந்த வகையை சேர்ந்த கடன்காரன் எதோ உங்களைப் பார்த்தவுடன் பயந்து முக்காடு போட்டுக்கொண்டு ஓடி விடுவான் என்றோ போன் நம்பரை மாற்றுவான் என்றோ நினைக்காதீர்கள். உங்களிடையே தான் சுற்றி கொண்டிருப்பான். எதற்குமே அஞ்ச மாட்டான். நீங்கள் கேட்பீர்கள் என்ற பயம் கொஞ்சம் கூட அவனுக்கு இருக்காது. அப்படியே நீங்கள் மிஞ்சி மிஞ்சி கேட்டீர்களானால் நீங்க இதுவரைக்கும் எனக்கு எட்டு ரூபாய் கொடுத்திருக்கீங்க இன்னொரு 2 ரூபாய் கொடுத்தீங்கன்னா பத்தாக கொடுத்துடுவேன் என்று அந்த பார்த்திபன் வடிவேலு காமெடி கண்முன் நிறுத்துவான்.
சரி இப்படி ஊரை சுற்றி கடன் வாங்கி இருக்கிறானே இவன் தொழில் தெரியாதவனா?? அல்லது மூளை இல்லாதவனா?? செய்கின்ற வேலையில் சோடை போகாதவனா?? வியாபாரம் தெரியாதவனா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை.அனைத்து திறமைகளையும் உள்ளடக்கி எடுத்த வேலைகளை சிறப்பாக செய்யக்கூடிய அளவுக்கு மூளை இருந்தும் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்த இடத்தில் கடன் வாங்கியே இப்படி சொகுசாக வாழ முடியும் என்று ஒருவனுக்கு தெரிந்து விட்டால் அவன் இதற்காக மூளையை கசக்கி வேலை செய்ய வேண்டும்??
இந்த வகை ஆட்களும் இப்படித்தான். அவர்களை இனி திருத்த முடியாது நாம் தான் திருந்தி கொள்ள வேண்டும்.அடுத்த முறை யாராவது உங்களிடம் கடன் கேட்டால் உங்களுடனும் அவருடனும் தொடர்பில் இருக்கும் மற்றவர்கள் அதாவது உங்களுக்கு என்று ஒரு தனி குரூப் இருக்கும் இல்லையா?? அந்த குரூப்பில் இருப்பவர்களிடம் முதலில் கேட்டு விடுங்கள். ஐயா இவர் இப்போது என்னிடம் இந்த தொகையை கடன் கேட்டு இருக்கிறார். தரலாமா?? உங்களில் யாருக்காவது அவரிடம் கொடுக்கல்-வாங்கல் இருக்கிறதா?? ஏற்கனவே கொடுத்து வாங்கி இருக்கிறீர்களா?? என்று கேளுங்கள்
அப்போது தான் புதுப்புது கதவுகள் திறக்கும் திறக்கப்பட்ட கதவுகளிலிருந்து பல எலும்புக்கூடுகள் சிதறும்.நாம ரத்தம் சிந்தி உழைத்து சம்பாதித்த பணம். ஜாக்கிரதையா இருங்க மக்கா இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.