சென்னை வடகிழக்கு பருவமழை தற்பொழுது அதிக அளவில் பெய்துள்ளது, நேற்று சென்னையில் சில மணி நேரங்களிலேயே 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மழை விட்டால் வெள்ளம் வடிந்து விடும் என எதிர்பார்த்த நிலையில் மழை விடாமல் பெய்து வருவது அங்குள்ள மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அந்தமான அருகே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மிகவும் வலுவடைந்து புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிக்ஜாம் அல்லது நிக்ஜாங் புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று ,மதியம் முதலே கனமழை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை மிகவும் தீவிரமடைந்தது சென்னை மாநகர் பகுதி மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் கனத்த மழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகனங்கள் எங்கும் நகர முடியாமல் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, முதல்வர் தொகுதியாகிய கொளத்தூரில் இரண்டு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் வெள்ளநீர் வடிய அங்கு இடமில்லாமல் போய்விட்டது.
இதன் காரணமாக முதல்வர் தொகுதி ஆயிற்றே என அமைச்சர் சேகர்பாபு நேற்று அங்கு இறங்கி களப்பணிகளை பார்வையிட்டார். இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்துவிட்டது, இந்த வருடம் சென்னையில் மழை பெய்தால் கவலைப்பட தேவையில்லை எல்லாமே சிறப்பாக இருக்கிறது மழை பெய்தால் உடனே வடிந்துவிடும் எனக் கூறிய மேயர் பிரியா எங்கே என சென்னைவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சமூக வலைதளங்களில் மேயர் ப்ரியாவின் படத்தையும் போட்டு சென்னை மழை நீரில் விடீயோவையும் போட்டு இதுதான் உங்கள் பேக்கேஜா என தங்களது ஆதங்கங்களை பதிவுகளாக இணையத்தில் பதிவிடுகின்றனர்.
இது மட்டுமில்லாமல் சென்னையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கும் வீடியோவையும் அதிக அளவில் இணையத்தில் பதிவிடுகின்றனர் நெட்டிசன்கள். சற்று தாமதமாகத்தான் வடியும் வேறு எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதும் தற்பொழுது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேரு பேசும் பொழுது இந்த முறை சென்னையில் மழை பெய்தால் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்றார். ஆனால் நேற்று முதல் அவர் சென்னை மழை குறித்து மீடியாவில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இப்படி மழை இல்லாத நேரத்தில் மழை பாதிப்பு இருக்காது இந்த ஆண்டு எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறிக் கூறிய இப்படி மழையில் எங்களை தத்தளிக்க விட்டு விட்டீர்களே என பல பதிவுகளும் பல குரல்கள் எழுவதையும் கேட்க முடிகிறது.
இது மட்டுமல்லாமல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் எனக்கூறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது அரசு, இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவு வாயில் செல்லும் வழியெல்லாம் கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலாக உலா வருகிறது. இது என்ன மிதக்கும் பேருந்து நிலையமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள்.