பான் இந்திய சினிமா ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை, சொல்லபோனால் தென்னகத்தில் இருந்து பான் இந்தியா சினிமா என்று சொல்லாமலே பான் இந்திய ரீச் அடைந்தது தமிழ் சினிமாக்கள்தான். அதற்கு அதன் புரொடக்ஷன் வேல்யூ எனும் தயாரிப்பு தரம் அதிகம் இருந்ததும் ஒரு காரணம், அதனாலே இந்தியிலும் தமிழ் டெக்னிஷியன்களுக்கு மதிப்பு இருந்தது.
ரோஜா படம் கட்டுபாடான ஓரளவு மத்திம பட்ஜெட் படம்தான், ஆனால் அதன் தரம் காலத்தை மீறி நிற்கும், அது வந்த 92களில் பாலிவுட் பெரிய பழைய பாணி மெலோட்ராமாக்களை எடுத்து கொண்டிருந்தது, ரோஜா டப்பிங் படமாகவே இந்தியா முழுமைக்கும் சென்றது. அதிலிருந்து ஒவ்வொரு சுதந்திர, குடியரசு தினமும் தூர்தர்ஷன் இந்தியா முழுமைக்கும் ஒளிபரப்பி கொண்டேயிருந்தார்கள், மணிரத்னம் இப்படிதான் பான் இந்திய டைரக்டர் ஆனது.
காதலன் படத்தின் முக்காலா பாடல் அப்போதைய இந்திய சினிமாவில் பெரிய புரட்சி, இசை, நடனம், காட்சியமைப்பு, செட், கிராபிக்ஸ் என பெரிய தாவல், இந்தியா முழுமைக்கும் டப் செய்த பாடல் சென்று சேர்ந்தது. அப்போதெல்லாம் இப்படி நாடுமுழுதும் திரையிடும் வசதி அல்லது வழக்கம் இல்லாததால் அதெல்லாம் முழுமையான பான் இந்தியன் படமாக பிற மாநிலங்களில் வசூல் செய்யமுடியவில்லை.
பம்பாய் இந்தியிலும் டப் செய்யப்பட்டு பெரிய பரபரப்புடன் வெளியிடப்பட்டது, அதன் பாடல்களும் இந்தியா முழுமையையும் கலக்கியது. இந்தியன் படம் வெளிவரும்போது கிட்டத்தட்ட இந்தியாவின் பெரிய ப்ரோஜக்ட் அது, அதன் மேக்கப், கிராபிக்ஸ், உயர்தர காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, செட், ஆடைகள் என எல்லாவற்றிலும் பெஞ்ச்மார்க்காக இருந்தது, அதற்கு மேல் கமலின் நடிப்பும், ஷங்கரின் டைரக்ஷனும், அதையெல்லாம் தாங்கும் வலுவான கதையும் இருந்தன. அப்போதும் இந்தியிலும், தெலுங்கிலும் பழைய பாணி படங்களே வந்துகொண்டிருந்தன.
ஷங்கரின் ஜீன்சும் இந்தியா முழுதும் பல மொழிகளில் வந்த பெரிய படம்தான், அதுவும் அதன் பிரம்மாண்டம் மற்றும் தொழில் நேர்த்திக்காக பாராட்டப்பட்ட படம்தான். அதுவரை இந்திய சினிமாவில் இருந்த ட்ரிக் காட்சி இரட்டையர் படங்களின் சகாப்தத்தை முடித்து தத்ரூபமாக இருவர் இருப்பது போல் கிராபிக்ஸ் மூலம் நேர்த்தியாக செய்த முதல் இந்திய படம் இதுதான்.
அதற்கு முந்தைய படங்களில் இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பாத்திரங்கள் ஒரே ஷாட்டில் வந்தால் தள்ளி நிற்கும், தொடமாட்டார்கள், அல்லது டூப் போட்டு கட்டி பிடிப்பார்கள், நமக்கே அது தெரியும், ஜீன்ஸ்தான் இந்த குறைகளை கிராபிக்ஸ் மூலம் களைந்த முதல் படம். இதுவும் இந்தியா முழுதும் வெளியிடப்பட்டது. மணிரத்னம் அப்போது இந்தி சென்று அங்கு தில்சே என படமெடுத்து இங்கு டப்பிங்கில் வெளியிட்டார்.
கமல் ஹேராம், ஆளவந்தானை இந்தியா தழுவிய படமாகத்தான் வெளியிட்டார். இந்த படங்கள் வென்றதோ தோற்றதோ இவை மரியாதையை சம்பாதித்தன, அதனால்தான் தமிழக டெக்னீஷியன்கள் சிறந்தவர்கள் என்ற பெயர் இந்திவரை இருந்தது.
மணிரத்னம் மற்றும் ஷங்கர் இருவரும் தங்களின் அடுத்தடுத்த படைப்பை இந்தியா முழுதும் சென்றடைய கூடியதாய் வடிமமைத்து மார்க்கெட் செய்து வந்தனர், அவர்களுக்கு அந்த மரியாதையும் இருந்தது, மற்ற மொழி படங்களில் இருந்து இப்படி இந்திக்கு சவால்விடும்படியாக எல்லாம் படங்கள் தொடர்ந்து வரவில்லை. மணிரத்னம் அதன்பின் இந்தியை மையமாக கொண்டு இரட்டை மொழி (தமிழ் இன்னொரு மொழி) அல்லது இந்தி படங்களாகத்தான் எடுத்து வந்தார், யுவா - ஆயுத எழுத்து, குரு, ராவண் - ராவணன் என.
ஷங்கரின் எல்லா படங்களும் இந்தி டப்பிங்காக அங்கு வெளிவந்தன, முதல்வனை முழு இந்தி படமாக நாயக் என்று இந்தியில் செய்தார் பெரிதாக போகவில்லை, ஆனால் இந்திய அளவில் அவர் பெயர் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது, அதன்பின்னர்தான் சிவாஜி. சிவாஜி படம் ரஜினி - ஷங்கர் மேஜிக் என தென்னகம் நாலு மாநிலத்தையும் புரட்டி போட்டது அதனாலே இந்தியில் பரபரப்பை ஏற்படுத்தி எல்லா ஆங்கில சேனல்களும் நேரடி ரசிகர் ரியாக்ஷன், தியேட்டர் வாசல் பரபரப்பு என இந்தியா முழுமைக்கும் ஒளிபரப்பினர், கிட்டத்தட்ட இந்தியா முழுதும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஆனால் அந்த காலகட்டத்தில் எல்லாம் கான்களின் படங்கள் இந்தியில் ஆதிக்கம் செலுத்திய காலம், தமிழ் - தெலுங்கு என எந்த படம் பான் இந்தியா படமாக வந்தாலும் வெறும் டப்பிங் படம் என மட்டந்தட்டி கிடப்பில் போட முயல்வர், எந்திரனுக்கே அது நடந்தது. எந்திரன் இன்றைய பாகுபலி போல் அசல் பான் இந்திய படமாக இந்தியா முழுக்க பிரம்மாண்டமாக வெளிவந்தது, ஆனால் இந்தி சினிமா ரன்பீர் கபூரின் சாதாரண படமான அஞ்சானா அஞ்சானியை வேண்டுமென்றே கொண்டாடினர்.
ஆனால் எந்திரனின் வெற்றியை மறைக்க முடியவில்லை, வடநாட்டில் எந்திரன் பாக்காத ஆளே கிடையாது, அதை ரசிக்காதோரும் இல்லை, ஒவ்வொரு இந்தி டீவி சேனல் வழி எல்லாரையும் அடைந்திருக்கிறது, சந்தேகமிருந்தால் நீங்கள் நேரில் பார்க்கும் இங்கு வேலைக்காக வந்த வட இந்திய தொழிலாளியிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் பார்த்திருப்பார்கள். விஸ்வரூபமும் இந்தியா முழுதும் வெளியான படம்தான்.
அதன்பின் கான்கள் ஒவ்வொருவராக தோல்வியுற, தெலுங்கில் பாகுபலி போன்ற படங்கள் வர இந்தி மொழி மார்க்கெட்டும் இவற்றை திறந்த மனதோடு பான் இந்தியன் படமென ஏற்க ஆரம்பிக்கின்றன. ஆனால் இதற்கான முன் போராட்டத்தை பெருமளவில் நடத்தியது தமிழ் சினிமாதான், ஆனால் வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தார் போல இதை முழுதாக பயன்படுத்த இப்போது தமிழில் ஆட்கள் இல்லை.
புரட்சி படம் எடுக்கிறோம் என்று புது அலை இயக்குனர்கள் தங்கள் திறமையின்மையால் தமிழ் மக்களுக்கே பிடிக்காத படமெடுத்து சோஷியல் மீடியா பாராட்டின் மூலம் மக்களிடம் திணித்து கொண்டுள்ளனர், இவர்கள் முதலில் தமிழ் மக்களுக்கு பிடித்தது போல் படமெடுக்கவேண்டும், பின்புதான் பான் இந்திய படம் பற்றி யோசிக்க முடியும். மறுபடியும் ஷங்கர், மணிரத்னம், ரஜினி, கமல் போன்ற தமிழின் முன்னத்தி ஏர்கள் திரும்ப வந்து இதை செய்து காட்ட வேண்டும்.
credit -விஸ்வக்சேனன்