தமிழகத்தில் பாஜகவை சுற்றியே அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன, பாஜகவின் உட்கட்சி விவகாரங்களில் கூட ஊடகங்கள் மூக்கை நுழைத்து வருவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இன்று அதே போன்று கேள்வியை முன் வைத்த பத்திரிகையாளர்களிடம் பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பூ.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் பாஜக சார்பில் இன்று ஜனவரி 8 அன்று பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த குஷ்பு,
“பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பாஜகவில் எல்லா பெண்களும் கட்சியை விட்டுப் போகவில்லை. ஒரு சிலர் கட்சியை விட்டுப் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. நானும் கட்சியில் தான் இருக்கிறேன். திமுகவினர் என்னைப் பற்றி தவறாகப் பேசிய போது பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தற்போது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாகப் பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு என்பதைத் தமிழகம், தமிழ்நாடு என்று அழைக்கலாம். ஆனால் எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் தான். நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தான் உள்ளேன்” என்று பேசினார் குஷ்பு.
எப்படியாவது பாஜகவின் உள்விவகாரத்தில் தலையிட்டு கேள்வி எழுப்பி பாஜக மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைத்து விடலாம் என கணக்கு போட்டு சில பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இன்று காயத்ரி ரகுராம் குறித்த கேள்விக்கு குஸ்பூ கொடுத்த பதிலடி ஒரு பாடமாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.