பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள். இதன் பகுதியாக பசும்பொன்னில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்ட போது இபிஎஸ் ஒழிக என்ற கோஷம் எழுப்பியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் காலையில் சென்று மரியாதையை செலுத்தினார்.
அதன் பின் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அதன் பிறகு பலத்த பாதுகாப்புக்கு பின் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எடப்பாடி பழனிசாமியே திரும்பி போ! ஒழிக! என்கிற கோஷங்கள் எழுப்பப்பட்டன. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த போது வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார்.
இது முக்குலத்தோர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு செய்த துரோகம் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அவரின் காரை மறித்து கற்கள் மற்றும் காலணிகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறை இரண்டு பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் தேர்தலின் போது முக்குலத்தோர் மக்களின் வாக்குகளை எடப்பாடி பழனிசாமி பெறுவது சிரமம் என்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு என்று கூறி வன்னிய மக்களை ஏமாற்றினார். 10.5 இட ஒதுக்கீட்டால் தென் மாவட்ட மக்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர் எதற்காக இங்கு வந்தார் என்று விமர்சித்தார்.இதற்கெல்லாம் கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தது, ரொம்ப அநாகரீகமானது.
அவரு மேல உங்களுக்கு வெறுப்பு இருந்தால், வேறு இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் பொதுக் கூட்டம் பேசும் போதும் வாக்கு சேகரிக்கும் போதும் வைத்து கொள்ளலாம். இது எங்க அய்யாவின் புனித இடம். அந்த இடத்தில் இப்படி செய்வது என்பது முத்துராமலிங்க தேவரையே அவமதிப்பது போன்றது. எங்க தாத்தா முத்துராமலிங்க தேவரையே அவமதிப்பதாகும். நான் எல்லாம் ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த இடம் அதற்கு ஏற்புடையது அல்ல. வழிபட வந்துள்ளார்.. அவருக்கும் உரிமை உண்டு. உங்களுக்கும் உரிமை இருக்கு. நீங்க வழிபட்டுவிட்டு அவரைப் போக விடவேண்டும்.
உங்க ஊரில் வாக்கு கேட்க வரும் போது வெளியே போங்க, வராதீங்கன்னு சொல்லலாம். அதுவேற. அந்த இடத்தில் அதை செய்யக் கூடாது.. வெறுக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.முன்னதாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சீமானுக்கு கூட்டணி அழைப்பு வந்ததாக தகவல் வெளியானது. அதற்கு சீமான் தனித்து தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இபிஎஸ்க்கு தற்போது ஆதரவாக கண்டனம் தெரிவித்த நிலையில் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.