சமூக நீதி போராளி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அவரது திருவுறுவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சத்தத்தை எழுப்பியவாறும், பெரிய அளவிலான கொடிகளை வைத்துக் கொண்டு கோவை சாலை, பேருந்து நிலைய வளாகத்திற்குள்ளும், மேற்கு பிரதட்சணம் சாலை, ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்தனர்.சர்ச் கார்னர் வழியாக வெங்கமேடு நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, பாஜக போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக வந்த இளைஞர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது பலரும் வந்த வழியாகவும், போலீசாரிடமும் சிக்காமல் தப்பிச் சென்றனர். அப்போது சிக்கிய இளைஞர்களில் 4 பேரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், 2 பேரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு இடையூரு செய்யும் வகையில் செயல்பட்ட இளைஞர்கள் சிலரை அதே சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் தர்ம அடி கொடுத்து வீட்டிற்கு அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.