திராவிட கழக தலைவர் வீரமணி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 12 நாட்களில் பல சாதனைகள் செய்துவிட்டதாகவும், இதுதான் திராவிட மாடல் என பாராட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் வீரமணி அதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வைத்து வருகின்றனர்.
வீரமணி எழுதிய மடல் பின்வருமாறு :- பதவி ஏற்று 12 நாள்களில் பார் போற்றும் சாதனைகள்!முதலமைச்சர் பொறுப்பை திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்று இன்றுடன் (19.5.2021) 12 நாள்கள்தான் ஆகின்றன. பதவியேற்ற இக்கட்டான நேரத்தின் பெரும் சவால் அவர் அப்பொறுப்பை ஏற்குமுன்பே - 4 நாள்களுக்கு முன்பே செயல்படத் தொடங்கி, கரோனா கொடுந் தொற்றுத் தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக்கி, அதிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதை அந்நாள் பதவியிலிருந்த தலைமைச் செயலாளர் முதல் முக்கிய அதிகாரிகள்வரை ஆராய்ந்து செயல்படத் தொடங்கிவிட்டார்!
ஏனென்றால், அவர் பதவியேற்ற இக்கட்டான நேரத்தின் பெரும் சவால் இதுதானே! அதேநேரத்தில், மக்களுக்கு அவர் தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை செயல்வடிவமும் கொள்ளச் செய்து, மக்கள் நெஞ்சை கொள்ளை கொண்டு வரு கிறார்!
கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின்வீச்சு பல மாநிலங்களில் அதன் வேகத்தைக் காட்டி மக்களை அலைக்கழிக்கும் நிலையில், அதனைத் ‘தடுத்தாட்கொள்ளும் வகையில்' எதிர் நடவடிக்கையாக மக்கள் மத்தியில் பிரச்சாரம்; முகக்கவசம், கிருமி நாசினி, தடுப்பூசி, ஊரடங்கு, கட்டுப்பாடுகள் ஒருபுறம்; மறுபுறம் புயல் வேகத்தில் செயல்படும் அமைச்சர் குழுவினர்.
நோயாளிகள் - மக்களின் குறையைத் தீர்க்கும் நேரடி நடவடிக்கை ஆக்சிஜன் என்ற உயிர்க் காற்று பற்றாக்குறை போக்குதல், படுக்கைகள் பற்றாக்குறை நீக்குதல், ஆம்புலன்ஸ், நகரில் நடமாடும் மருத்துவ சேவைகள், மருந்து விற்பனையைப் பரவலாக்குதல், புதிய புதிய கரோனா தடுப்பு, விழிப்புணர்வு மய்யங்களை ஏற்பாடு செய்தல், ஆக்சிஜன் பற்றாக்குறை போக்க தமிழ்நாட்டில் பல இடங்களில் உற்பத்திக்கு ஏற்பாடு செய்தல்
தனது அமைச்சரவை - அதிகாரிகள் குழுவின் ஆக்கப்பூர்வ மான முயற்சிகள்மூலம், கரோனா தடுப்பூசியை பரவலாகப் போட்டுக் கொள்ளும் முயற்சிக்கேற்ப தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுதலோடு, நேரடியாக பன்னாட்டு டெண்டர்மூலம் இறக்குமதி செய்ய தேவையான முயற்சிகள் - அதையும் தாண்டி, தடுப்பூசிகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க முன்வரு வோரை அடையாளம் கண்டு அனுமதிக்கும் ஏற்பாடு என்றும் செயல்பட்டு வருவதோடு, தானே இரவிலும் ‘போர் அறை' என்ற கரோனா தடுப்பு அறையில் சென்று ஆய்வு செய்து, நோயாளிகள்
மக்களின் குறையைத் தீர்க்கும் நேரடி நடவடிக்கை என்ற பல்முனைப் பணி வீச்சில் முழு மூச்சாக ஈடுபடுவதைக் கண்டு அனைவரும் வியப்பில் விம்முகின்றனர்! கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகையாக ரூ.4,000 வழங்கிட ஆணையிட்டு, மே மாதத்திலேயே ரூ.2,000 முதற் கட்டமாக வழங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல் வேகம் - பாராட்டாதவர் எவர்?
பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நன்றி!அதுமட்டுமா? 100 நாள்களுக்குள் தீர்ப்பேன் என்ற ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை' உருவாக்கப்பட்ட இந்த 10 நாள்களில் - அவரிடம் முன்பு கொடுக்கப்பட்ட - பூட்டி வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள்மீது நடவடிக்கை - அம்முயற்சி காரணமாக நேற்று (18.5.2021) 549 மனுக்கள்மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டு, பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்ளும் காட்சி எவரையும் நெகிழச் செய்கிறது!
புயல் வேகத்தையும் மிஞ்சுவதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் வேகம் என்று உலகமே மூக்கின்மேல் விரலை வைக்கிறது! அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்த பேதத்தையும் பார்க்காத அனைவருக்கும் உரியவரான முதலமைச்சர்; எதையும் வெளிப்படைத் தன்மையுடன் (Transparency) செய்து காட்டும் ஆட்சித் தலைமை யாளர் என்ற ‘‘அற்புதங்களை'' (Miracles) அவர் நிகழ்த்தி அனைவரையும் அசர வைக்கிறார்!
அவரது இந்த செயல் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் சிறந்த அதிகாரிகள் குழுவும், அமைச்சர்கள் தேர்வும், கருணை பொழியும் கடமை உணர்வும் தமிழ்நாட்டையே பெருமிதம் கொள்ளச் செய்கிறது! அதேநேரத்தில், தி.மு.க. தொடர்ந்து வற்புறுத்தி வரும் மாநில உரிமைகள், கல்விக் கொள்கைகள், சமூகநீதிக்கு வந்துள்ள ஆபத்துகளைக் களையும் முன்னேற்பாடு, சொன்னதைச் செய்து, மக்களாட்சியின் மாண்புக்குத் தனிச் சிறப்பை சேர்க்கிறது!
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல - அவர் தலைமை; இந்திய ஜனநாயகத்தின் காப்பாளராகப் பயன்படும் என்பதால், பல முதலமைச்சர்கள் ‘‘திராவிட மாடலையே'' எதிர்நோக்கி நம்பிக்கையுடன் இதனைக் கற்கும் பாடங்களாக்கிக் கொள்ள விழைகின்றனர்! காரணம், அவரது பொறுமையும், பொறுப்புணர்வும் நாளும் அவரை உயர்த்தி வருகிறது!
தந்தை பெரியாரின் லட்சியப் பிடிப்பையும், அறிஞர் அண்ணா - கலைஞர் தந்த அரசியல் பாடத்தையும் நன்கு கற்று, அதற்குத் தக நிற்கத் தொடங்கி ஆட்சியின் சாதனை சரித்திரத்தை நாளும் எழுதி, மக்கள் நலம் காக்கும் எடுத்துக்காட்டான பணியில் ஓய்வறியாத உழைப்பின்மூலம் ஈடுபட்டு உயர்ந்து வருகிறார்.
இவ்வாறு ஒரு மடலை திராவிட கழக தலைவர் வீரமணி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருவதுடன், பச்சை பச்சையாக அவரது பதிவிற்கு கிழே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தொற்று ஒரே நாளில் அதிகம் பதிவாகியுள்ளது.
இறந்தவர்களை எரிக்க மயானத்தில் இடமில்லாமல் வரிசையில் சடலங்கள் வைக்கப்படும் அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஸ்டாலின் சாதனை செய்துவிட்டாரா என்று பலரும் வீரமணியை கடிந்து வருகின்றனர்.