24 special

பிடியை "இறுக்குங்கள்" கட்டுப்படுத்துங்கள் டாக்டர் கிருஷ்ணசாமி டிஜிபிக்கு அதிரடி கடிதம்..!

dgp sylendrababu, Dr.krishnasamy
dgp sylendrababu, Dr.krishnasamy

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துவரும் வேலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம் ஒன்றை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி, கோவை மாவட்ட ஆட்சியர் போன்றோருக்கு அனுப்பி இருக்கிறார் அதில் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது கோவை மாநகரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகும். கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான தொழில் நகரமாகும். 2019 ஆம் ஆண்டு கோவிட் முழு முடக்கத்திற்குப் பிறகு, இப்பொழுதுதான் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரிய தேக்கத்திலிருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மாநகரின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சுகளும், அதே போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நடந்து வரும் சம்பவங்களும் எவராலும் எளிதில் கடந்து செல்லக் கூடியவைகள் அல்ல.

1998 ஆம் ஆண்டு கோவையில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகள் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில்  நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்தனர்; கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதனால் கோவையில் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாக அனைத்து துறைகளும், தொழில்களும் முடங்கின.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோவையிலிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெறும் சூழல் ஏற்பட்டது. சிறு முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து சேவை நிறுவனங்களும் முடங்கிப் போயின. எண்ணற்றோர் சிறைவாசம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு வழக்குகளை சந்திக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. 

அதன் தாக்கத்திலிருந்து கோவை மாவட்டம் மீண்டெழ ஏறக்குறைய 10 வருடங்கள் ஆகின. இப்பொழுது அதற்கு நிகரான சூழ்நிலைகள் உருவாகிவிடுமோ என்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதாகவே கோவை மாநகர மக்கள்  அச்சப்படுகிறார்கள்.

சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவுற்ற 76 ஆவது வருடத்தில் நாம் பயணிக்கிறோம். இந்திய பிரஜைகள் அனைவருக்கும் பேச்சுரிமையும், எழுத்துரிமையும், கருத்துரிமையும் இந்த நாட்டில் வாழ்வதற்கான சம உரிமையும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏதாவது வகையில் பாதிக்கப்படுவோர் தங்கள் பகுதியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் முதல் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் வரை செல்ல உரிமையும் உள்ளது.

எனவே எந்தப் பிரச்சனைக்கும் சட்ட ரீதியான அமைதியான தீர்வுக்கு இந்திய அரசியல் சாசனம் வழி வகுத்துக் கொடுத்துள்ளது. அதை விட்டுவிட்டு வன்முறை பாதையைக் கையில் எடுப்பது எவ்விதத்திலும் நன்மை பயக்காது.

ஒரு சிலருடைய நன்மைக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வன்முறையைத் திணிப்பதோ, இலட்சக்கணக்கான மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதோ அப்பட்டமான மனித உரிமை மீறலும், சட்ட மீறலும் ஆகும். எனவே வன்முறையைக் கையில் எடுப்பவர் யாராக இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். காலம் சிறிது கூடுதலாக தேவைப்பட்டாலும் உண்மை குற்றவாளிகளை மட்டுமே கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி விரைந்து நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.

அப்பொழுது மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.1998 இல் கோவையில் ஏற்பட்ட சம்பவங்களை முழுமையாக நினைவு கூர்ந்து இப்பொழுது நடக்கக்கூடிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு இனி எந்த ஒரு சிறு சம்பவம் கூட கோவை மாநகரில் நடைபெறாத வண்ணம் அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய ”அமைதிக் குழுவை” உடனடியாக கோவை மாநகர அளவில் நியமித்து மக்கள் மத்தியில் நிலவக்கூடிய அச்சத்தை போக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோன்று தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களையும் கட்டுக்குள் கொண்டு வரச் சட்டத்தின் பிடியை இறுக்கவும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.