தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு, நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலங்கானா மக்கள் வாக்களித்து வரும் நிலையில் மற்றொருபுறம் திரைபிரபலங்களும் தங்களின் குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என கடந்த அக்டோபர் மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் திருவிழா களைக்கட்டியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தெலங்கானாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.
தெலங்கானாவில், 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு காலை முதல் நடப்பதன் காரணமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக 50,000 காவல்துறையினர், 375 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்றதால், இத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.
மொத்தமுள்ள 35,655 வாக்குச்சாவடிகளில் 27,000 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை கேமராக்கள் மூலம் கண்காணிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்த தேர்தலில் 2,290 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 7 முதல் நவம்பர் 25 வரை வாக்குப்பதிவு நடந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்த தெலுங்கானா முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்த சூழலில் திரையுலக பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர். தெலங்கானாவில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். இதன் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று,
அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்துடன் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர். மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர். ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவண் கல்யாண் தனது வாக்கை பதிவு செய்தார்.நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் நிதின் ஆகியோரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட பிஆர்எஸ் கட்சி இந்த முறை ஆட்சியை இழக்குமா அல்லது மாற்று கட்சியான பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சியை அமைக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்