24 special

ரெய்டில் மாட்டியுள்ள பல முக்கிய ஆதாரங்கள்...!புலம்பலில் மூத்த தலைவர்கள்...!

Ponmudi, mkstalin
Ponmudi, mkstalin

பொன்முடி வீட்டில் நடந்து வரும் ரெயிடு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் திமுகவின் மூத்த தலைவர்கள் புலம்பி இருப்பதும் சொன்னது அப்படியே நடக்கிறது என பேசி இருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. அதிலும் விழுப்புரம் வீட்டில் உள்ளே அதிகாரிகள் திரைப்பட பாணியில் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.


பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா  பேட்டி ஒன்றில் , ‘அடுத்தது கேட்டை திறந்து வைக்க வேண்டியது கே.என்.நேருவும், பொன்முடியும் தான்’ என்று கூறியிருந்தார் இது தற்போது அப்படியே நடந்து இருக்கிறது.செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஒரு மாதம் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று  மற்றொரு அமைச்சரான உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டில் காலை 7 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.அதுபோன்று விழுப்புரத்தில் சண்முகபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்கும் 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு காரில் சென்றனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டின் கேட்டை தட்டிய போது, ‘வீட்டில் யாரும் இல்லை, அமைச்சர் குடும்பத்தோடு சென்னையில் இருக்கிறார்’ என்று பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் ஓட்டுநர் செல்வம் கூறியிருக்கிறார்.

அப்போது ஓட்டுநர் செல்வத்திடம் அமைச்சருக்கு தொடர்புகொண்டு,  ’அமலாக்கத் துறை வந்திருக்கிறது’ என்று  சொல்லுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.அதன்பேரில் செல்வம் சென்னைக்கு தொடர்பு கொண்ட போது அமைச்சர் செல்போனை எடுக்கவில்லை. சென்னையில் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் பொன்முடி செல்போனையும், குடும்பத்தினர் செல்போனையும் பறிமுதல் செய்து வைத்திருப்பதால் அழைப்பை ஏற்கமுடியவில்லை.

இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னையில் இருக்கும் அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர். அதன்பிறகு அமலாக்கத் துறை அனுமதியோடு பொன்முடி, ஓட்டுநர் செல்வத்திடம் செல்போன் மூலம் பேசி, சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டை திறந்துவிட சொல்லியிருக்கிறார். அதன்படி காலை 8.30 முதல் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விழுப்புரம் வீட்டில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள கயல்பொன்னி ஏஜென்சிக்கு இரண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.விக்கிரவாண்டியில் உள்ள அவருக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பொன்முடி வீட்டில் இருந்த காரில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.காரில் கைப்பற்ற பட்டுள்ள ஆவணங்களை உடனடியாக தடவியல் நிபுணர்களை கொண்டு பரிசோதனை செய்ய பொன்முடி வீட்டிற்கே மத்திய தடவியல் துறையினர் வரவைக்கபட்டு இருக்கின்றனர். கையெழுத்து யாருடையது எந்த வருடம் போடப்பட்டது உண்மையான கையெழுத்தா இல்லை போலியாக ஏதேனும் நடைபெற்று இருக்கிறதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறதாம்.

பல்வேறு முக்கிய ஆவணங்கள் தொடர்ச்சியாக சிக்கி வருவதால் அடுத்து எந்த அமைச்சர் வீட்டுகளில் அமலாக்கதுறை சோதனை நடைபெற போகிறது என்ற பதற்றத்தில் இருக்கிறதாம் திமுக அமைச்சர்கள் வட்டாரம்.