மும்பை : பிஜேபி முன்னாள் எம்பியான கிரித் சோமையாவின் மனைவியான மேத்தா சோமையா தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கில் சிவசேனா எம்பியான சஞ்சய் ராவத் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இதனால் நேற்று மும்பை நீதிமன்றம் சஞ்சய் ராவத்துக்கு எதிராக வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் செவ்ரி பெருநகர நீதிமன்றம் சஞ்சய் ராவத்துக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் ஜூலை 4 அன்று ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கூறியிருந்தபோதும் சஞ்சய் ராவத் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என தெரிகிறது. இதை மேத்தா சோமையாவின் வழக்கறிஞரான விவேகானந்த் குப்தாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் " சஞ்சய் ராவத் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். அதனால் சஞ்சய் ராவத்திற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றத்தில் விண்ணப்பித்தோம். நீதிபதிகள் எங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அனுமதியளித்துள்ளனர்.
மாஜிஸ்திரேட் சம்மன் பிறப்பித்தபொழுது ஆவணங்கள் வீடியோ பதிவுகள் ஆகியவற்றில் புகார்தாரரான மேத்தாவுக்கு எதிராக சஞ்சய் அவதூறு வார்த்தைகளை உதிர்த்தது சரிபார்க்கப்பட்டது. மேலும் செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்து புகார்தாரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்ட்டுள்ளது.
மேலும் சஞ்சய் பேசியது புகார்தாரர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது" என சோமையாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் மீரா பயந்தர் கார்பரேசனுக்குட்பட்ட பகுதிகளில் கழிவறை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளில் மேத்தா பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக சஞ்சய் கூறியிருந்தார்.
இந்த ஆதாரமற்ற குற்றசாட்டை எதிர்த்து மேத்தா சோமையா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரவேண்டும் என மேத்தா நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.