செந்தில்பாலாஜி மருத்துவமனையில் படுத்திருக்கும் நேரம் சத்தமில்லாமல் கரூர் கேங்கிற்கு திமுக அரசு அடித்த அதிரடி அடியால் ஒட்டுமொத்த செந்தில்பாலாஜி கும்பலும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக இருக்கிறது அவருக்கு தற்போது ஓய்வு தேவை அதனால் மூன்று மாதங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும் தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்தனர். முன்னதாக அவரது பொறுப்பில் இருந்த மின்சாரம் மற்றும் அதுவிலக்கு ஆயத தீர்வைத் துறையை தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகிய அமைச்சர்களுக்கு தமிழக அரசு கூடுதல் பொறுப்பாக பிரித்துக் கொடுக்கிறதாக அரசாணை வெளியிட்டது மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் திமுக அரசிற்கு தொடர் அவப்பெயர்கள் ஏற்பட்டு வருவதால் அதனை சமாளிக்க திமுக தலைமை ஆலோசனையில் இறங்கி, ஏற்கனவே அறிவித்தது போன்று தற்போது மது கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
நேற்றைய தினத்திலிருந்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் எங்கே மதுவிலக்கு என மக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர் கேள்விகளை எழுப்பியதால் கடந்த ஏப்ரல் மாதத்தின் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்படும் என்று அறிவித்தார். பள்ளி கல்லூரிகள் மற்றும் கோவில்கள் போன்ற பகுதிகளின் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் இந்த சட்டப்பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளி வந்தது. இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாத இருந்துவந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊழல் வழக்கு மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்ற செய்தியை தமிழக அரசு மறந்துவிட்டது.
முன்னதாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதன் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவித்திருந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் கும்பலின் தலையீடு காரணமாகவே அதிக வருமானம் வரும் டாஸ்மார்க் கடைகளை மூடக்கூடாது என்று அரசு கடைகளை மூடாமல் இருந்ததாகவும் தகவல்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சர் இல்லை என்ற காரணத்தினாலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் திமுக டாஸ்மாக் கடைகளை மூடி நல்ல பேரை வாங்கிக் கொள்ளும் வேலையில் இறங்கி உள்ளது. சமீபத்தில் சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானத்தை தற்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார் முத்துசாமி நடைமுறைப்படுத்தி சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவையில் 78 கடைகள், மதுரையில் 125 கடைகள், திருச்சியில் 100 கடைகள், சேலத்தில் 59 கடைகள் என மொத்தம் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படி டாஸ்மார்க் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பது செந்தில் பாலாஜி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த மது கடைகள் மூடுவதை வைத்து கரூர் கேங் உங்கள் டாஸ்மார்க் கடைகள் மூடப்படாமல் இருக்க பணம் கொடுங்கள் என பார் ஓனர்களிடம் வசூலித்ததை மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்! தற்போது செந்தில் பாலாஜி இல்லாத சமயத்தில் திமுக அமைச்சரவை குறிப்பாக டாஸ்மார்க் துறை செயல்படுத்தும் இந்த காரியம் செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. மேலும் பார்களை மூடாமல் இருக்க பணம் வசூல் செய்த கரூர் கேங்கிற்கு இது மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இந்த மூடப்படும் கடையில் பார்கள் வைத்துள்ள சிலர் கரூர் கேங்கிற்கு பணம் கொடுத்திருந்தால் தற்பொழுது மூடப்படுவதால் அவர்கள் கரூர் கேங்கிற்கு நெருக்கடி கொடுக்கும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிகிறது. அப்படி ஏற்பட்டால் அது ஏற்கனவே ரெய்டு ஒருபுறம், செந்தில்பாலாஜி தம்பி அஷோக்குமாரை அமலாக்கத்துறை விரட்டுவது ஒருபுறம் என இருக்கும் கரூர் கேங்கிற்கு பெரும் தலைவலியாக முடியும் எனவும் தெரிகிறது.