பிரபல நாளிதழில் வெளியான கடிதம் சார்ந்த செய்தி தற்போது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது, அதில் செந்தில் பாலாஜி தொடங்கி அடுத்தது பொன்முடி வரை என்ன நடக்கிறது என்பதை அப்படி குறிப்பிட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றனர்.முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து ஊழலில் ஈடுபட்டதால், இப்போது அமலாக்கத் துறையால் கைதாகி, சிறையில் இருக்க வேண்டிய செந்தில் பாலாஜி, உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் உள்ளார்.
அதேபோல, முந்தைய தி.மு.க., ஆட்சியில், கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அவரின் மகனும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு, 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், இப்போது நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ளனர்.செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து, இன்னும் எத்தனை அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கி, முதல்வருக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கி, அவரை நிம்மதியாக துாங்க விடாமல் செய்யப் போகின்றனரோ?
ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., மாவட்ட கலெக்டரை வார்த்தைகளால் வறுத்தெடுத்ததோடு, அவரின் ஆதரவாளர் கலெக்டரை கீழே தள்ளிய கொடுமையும் அரங்கேறியுள்ளது.தவறு செய்பவர்கள் எந்தக் கொம்பனாக இருந்தாலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்' என்று சட்டசபையில் சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின், தன் அமைச்சரவை சகாக்கள் இப்போது வழக்குகளில் சிக்கியதற்கும், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானதற்கும், என்ன நடவடிக்கை எடுப்பாரோ?
'ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி' என கம்பீரமாக முழங்கியவர்களின் ஆட்சியில், அமைச்சர்கள் தினமும், ஏதாவது ஒரு ஏழரையை கூட்டி விடுகின்றனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும், இந்த தருணத்தில், அமைச்சர்கள் செய்யும் தில்லு முல்லுகள் வெளியாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கோ, அவரின் மகனான தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கோ பெருமை சேர்ப்பதாக இல்லை.
முதல்வராக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், இப்படி சோதனை மேல் சோதனையை சந்திக்கும் ஸ்டாலின், மீதமிருக்கும் மூன்று ஆண்டுகளில் தன் அமைச்சர்களின் செயல்பாடுகளால், எத்தனை அவப்பெயர்களை சம்பாதிக்கப் போகிறாரோ?ஒரு பக்கம் மகன் மற்றும் மருமகனால் தொல்லை; இன்னொரு பக்கம் அமைச்சர்களால் தொல்லை. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல, முதல்வரின் நிலை பரிதாபமாகி விட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.