மேற்குவங்கம் : மமதாவின் திரிணாமூல் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியைப்பிடித்து ஆறாவது வருடம் நிறைவுபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரசால் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி திரிணாமூல் காங்கிரஸாரால் நடத்தப்பட்ட வன்முறையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை பிஜேபி அனுஷ்டித்து வருகிறது.
பிஜேபி சார்பில் நடத்தப்படும் பேரணிகளில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டு வருகின்றனர். இதனிடையே நேற்று பிஜேபி சார்பில் சுவேந்து அதிகாரி தலைமையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
கிழக்கு மேதினிபூர் மாவட்டம் பகவன்பூர் பகுதியில் ஆதிதியான முறையில் சுவேந்து அதிகாரி தலைமையில் பேரணி நடைபெற இருந்தது. பேரணி தொடங்கியபோது ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டும் ஜெய்ஹிந்த் என கோஷமிட்டும் பொதுமக்கள் மற்றும் பிஜேபியினர் நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த திரிணாமூல் தொண்டர்கள் திடீரென தாக்க ஆரம்பித்தனர்.
அதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி " தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பமுடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். குண்டர்களால் மிரட்டப்படுகிறார்கள். ஆணையத்தில் சாட்சி சொன்ன சிலரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. மமதாவின் அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளது. மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்வரை பிஜேபி போராடிக்கொண்டே இருக்கும்" என சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.