நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பிசினஸ் லைன் நிறுவனம் நடத்திய நேர்காணலில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், போக்குவரத்து வசதி என எடுத்துக் கொள்ளும் போது மிக நீண்ட நெடுஞ்சாலை வட இந்தியாவில் இருப்பது போன்று தென்னிந்தியாவில் இருப்பதில்லையே என கேள்வி கேட்கிறார் நெறியாளர். அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, " டெல்லியில் இருந்து சென்னை வருவதற்கு முதலில் நாம் பூனே அல்லது மும்பை செல்ல வேண்டும். பூனேவில் இருந்து இரண்டு வழிகள். பூனே -சோலாப்பூர் பிறகு பெங்களூரு. புனே -சோலாப்பூர் பிறகு சென்னை.
ஆனால் இப்போது 40 ஆயிரம் கோடி செலவில் கொண்டுவந்துள்ள புதுமை பசுமை சாலை மூலம் சூரத்தில் இருந்து நாசிக், நாசிக்கில் இருந்து அகமத் நகர், அகமத் நகரிலிருந்து சோலாப்பூர் செல்ல முடியும். அதாவது மும்பைக்கோ அல்லது பூனேவுக்கும் போக வேண்டிய அவசியமே கிடையாது. இதன் மூலம் மும்பை மற்றும் பூனேவில் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க முடியும். விரைவில் தொடங்க உள்ள இந்த திட்டம் முடிவு பெரும் தருணத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதாவது, சோலாப்பூரில் இருந்து கொச்சின், சோலாப்பூர் இருந்து பெங்களூரு, சோலாப்பூரில் இருந்து திருவனந்தபுரம், சோலாப்பூரில் இருந்து சென்னை, சோலாப்பூரில் இருந்து ஹைதராபாத். இப்படி நேரடியாக சோலாப்பூரில் இருந்து அந்தந்த ஊருக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதற்காக மும்பை பூனே தற்போது செல்வது போன்று இந்த திட்டம் வந்த பிறகு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெங்களூரு மைசூரு புதிய எக்ஸ்பிரஸ் சாலை தொடங்க இருக்கிறோம். இப்ப பிரச்சனை என்னவென்றால் தமிழ்நாட்டில் சாலை வசதி என வரும்போது மதிப்பீடு செய்வதற்கும், அதற்கான பொருளைப் பெறுவதற்கும், வன அனுமதி பெறுவதற்கும் பெரிய சிக்கலாக இருக்கு. இந்த பிரச்னையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே தமிழக முதல்வரிடம் பேசி இருக்கேன்.
ஆனால் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் எங்களிடம் கால அவகாசம் கேட்டு கேட்டு நீண்டு கிட்டே செல்கிறதே தவிர எந்த வேலை தொடங்குவதற்கு தேவையான எந்த ஒத்துழைப்பும் எங்களுக்கு கிடைக்காததால் எல்லாம் அப்படியே நிற்கிறது. இது குறித்து முதலமைச்சரிடம் பேசியிருக்கிறேன், மற்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் அனைவரிடத்திலும் பேசியிருக்கிறேன்.
எனவே மாநில அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம். தமிகத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 1000 கோடி கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய மாநிலமாக மாறும், வேலைவாய்ப்பு அதிகம் கொடுக்கக் கூடிய பல நிறுவனங்கள் அங்கு இருக்கின்றன.தொழில் நிறுவனங்கள் பெருகி வருகிறது. ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
நான் சொல்வதெல்லாம் அரசியல் சார்ந்து அல்ல. அதைத்தாண்டி உண்மையிலேயே வளர்ச்சி இருக்கவேண்டும் என நினைத்து சொல்கிறோம் ஆனால் அதற்குண்டான ஒத்துழைப்பு தமிழகத்தில் இருந்து கிடைக்கவில்லை என்பதுதான் இங்கு வேதனையான விஷயம் என குறிப்பிட்டு இருக்கின்றார் நிதின் கட்கரி