Tamilnadu

ஐயப்பன் குறித்து கேள்வி எழுப்பிய நாத்திகவாதிக்கு 18 வயது இளைஞன் கொடுத்த பதிலடி! இனி பருப்பு வேகாது!

periyar maniammai
periyar maniammai

ஐயப்பன் பிறப்பு குறித்து கேள்வி எழுப்பிய  நாத்திகம் பேசும் நபருக்கு 18 வயது இளைஞன் பதிலடி கொடுத்ததாக ஜெயமோகன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் குறிப்பிட்டவை பின்வருமாறு :- 1980களில் நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பாதிப்பேர் இந்துக்கள் அடங்கிய எங்கள் கல்லூரியில் உச்சகட்ட மதமாற்றப் பிரச்சாரம் நிகழும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இருசாராருமே இந்துக்களை நோக்கி ‘உங்களுக்கு வெறும் சடங்குகளும் ஆசாரங்களும் மட்டுமே உள்ளன. உங்கள் மதத்தில் ஞானநூல்கள் இல்லை. எங்களுக்கு மெய்நூல்கள் உள்ளன’ என வாதிடுவார்கள்.


நான் உட்பட எந்த இந்து மாணவனுக்கும் இந்துமதநூல்களைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இந்து தத்துவமோ ஆன்மீகமோ தெரியாது. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும்.அவர்களுடன் எப்போதும் இணைந்துகொண்டு செயல்படும் திராவிடர் கழகமும் அதையே சொல்லும். புராணக்கதைகளை எடுத்துக்கொண்டு அதை மிக எளிய அன்றாடத்தளத்தில் வைத்து ‘கட்டுடைப்பார்கள்’ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் அவர்கள் ஓரினச்சேர்க்கையா செய்தார்கள் என்பதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்.

இந்த தாக்குதல்களுக்குப் பதில்சொல்ல மரபான மடாதிபதிகளால், மதப்பிரச்சாரகர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர்களும் சடங்குகள், புராணங்களுக்குள் மட்டும் செயல்பட்டவர்கள்தான். நவீனச்சிந்தனைகளுடன் அறிமுகம் அற்றவர்கள்.  ஒருமுறை நான் இந்தப் பகுத்தறிவுக் கேள்விகளைப்பற்றி ஆழ்ந்த ஐயத்துடன் கிருபானந்தவாரியாரிடம் விளக்கம் கேட்டேன். முருகனின் வேல் உங்களை காப்பாற்றும், அதை வழிபடுங்கள் போதும் என்று பதில் சொன்னார், ஆன்மிகமும் தத்துவமும் அறிந்த சிலர் இருந்தனர், அவர்களை மிகச்சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அறிந்திருந்தனர். பெரும்பான்மையை நோக்கிச்செல்ல அவர்களிடம் ஊடகம் இல்லை, அமைப்பு இல்லை. இந்துமதம் சார்ந்து அமைப்புக்களை உருவாக்குவது எளிதும் அல்ல.

இச்சூழலில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் வருகிறார்கள், குறிப்பாக ஜக்கி வாசுதேவ், வேதாத்ரி மகரிஷி, மற்றும் ரவிசங்கர். “இந்துமதத்திற்கு நூல்கள் ஏதேனும் உண்டா?” என டிஜிஎஸ் தினகரன் நாகர்கோயிலில் பல்லாயிரம்பேர் கூடிய மாபெரும் கூட்டத்தில் அறைகூவியதை நான் நினைவுகூர்கிறேன். இன்று அதே மைதானத்தில் தான் ஜக்கி பல்லாயிரம்பேரைக் கூட்டி பதஞ்சலி யோகசூத்திரம் பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் பேசுகிறார். இப்படி ஒரு காலம் வந்துள்ளது.

இன்று மேலே சொன்ன இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்த்தை ஓர் இந்து இளைஞனிடம் சொல்லமுடியுமா? உன்னதமான யோகநூல்களும் தத்துவநூல்களும் காவியங்களும் இந்துமதத்தில் உள்ளன என்று ஒருவனாவது எழுந்து பதில் சொல்வான். பதஞ்சலியோகசூத்திரம் என்றும் யோகவாசிஷ்டம் என்றும் உபநிடதங்கள் என்றும் எடுத்துச் சொல்வான். இந்த இடத்துக்கு வந்துசேர இருபதாண்டுக்காலமும் அமைப்புசார்ந்த மாபெரும் பிரச்சாரமும் தேவைப்பட்டுள்ளது.

நாகர்கோயிலிலேயே எட்டாண்டுகளுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஐயப்பனைப்பற்றி அதே பழைய பகுத்தறிவு நையாண்டியைப் பேசிய பழைய கறுப்புச்சட்டைக்காரரிடம் 18 வயதான ஓர் இளைஞன் எழுந்து ’சிவன் யோகசக்தி. விஷ்ணு போகசக்தி. இரண்டும் இணைந்து உருவானதே ஐயப்பன். அது குறியீட்டு முறையில் சொல்லப்பட்டுள்ளது. உலகம் முழுக்க எல்லா ஞானமரபுகளிலும் குறியீடுகள் உள்ளன, உளறாதீர்கள்’ என பதில் சொன்னான்.

கறுப்புச்சட்டை பரிதாபமாக “தம்பி நீ இங்கர்சால், கார்ல்மார்க்ஸ் ,பெரியார்லாம் படிக்கணும்’ என்றார்.”அதெல்லாம் பழைய சிந்தனைகள். நீங்க முதல்ல ஜோசஃப் கேம்பல் படியுங்க. சிமியாலஜின்னு ஒண்ணு இருக்கு, போய்ப் படியுங்க. குறியீட்டை குறியீடா பாக்கிறது எப்டின்னு தெரிஞ்சுட்டு பேசுங்க. உளறாதீங்க’ என்றான்‘அட!’ என வியந்தேன். அவனை அழைத்துப்பேசினேன். அவன் பேசியது அப்படியே நாகர்கோயிலில் ஜக்கி வாசுதேவ் அக்கேள்விக்குச் சொன்ன பதில் என அறிந்தேன். கார்ப்பரேட் குருமார்களைப்பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பெரிய அளவில் மாறியது.

இதற்குத்தான் கார்ப்பரேட் அமைப்பு. நானும் இதே விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் ஐம்பதாயிரம்பேரைச் சென்றடைய முடியாது. ஜக்கி வாசுதேவின் அமைப்புதான் அந்த அடிப்படைச் சிந்தனைகளை ஐந்துகோடிப்பேரிடம் கொண்டுசென்று சேர்க்கமுடியும். இங்கே இந்துச் சிந்தனைகளையும் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தி பேசிவருபவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே அமைப்பாகத் திரண்டவர்கள். ஈவெரா ஊர் ஊராகப்போய் நிதி திரட்டினார். எடைக்கு எடை நன்கொடை பெற்றுக்கொள்ள ஊர்தோறும் தராசில் அமர்ந்தார். அந்தப்பணத்தால் பேச்சாளர்களை உருவாக்கி ஊர்தோறும் அனுப்பினார்.

இன்றும் அது ஜக்கிவாசுதேவ் அமைப்பை விட பலமடங்கு வலுவான செல்வமும் அரசியல் ஆதரவும் கொண்ட அமைப்பு. இங்குள்ள மதமாற்ற அமைப்புகள் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமானவை. செல்வமும் ,அதிகாரமும் ,சர்வதேசத் தொடர்புகளும், அறிவுலகில் ஐந்தாம்படை வலையும் கொண்டவை. அந்த அமைப்புக்கள் உருவாக்கிய கருத்துப்பிரச்சாரத்தை, அதிலுள்ள அப்பட்டமான திரிபுகளையும் காழ்ப்புகளையும் கொஞ்சமேனும் எதிர்ப்பதற்கு இன்னொரு அமைப்பால் மட்டுமே முடியும்.

இன்றிருப்பவை ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்களின் ஓரிரு சின்ன அமைப்புக்கள்தான். இன்னமும் உருவாகவேண்டும். இங்கு இந்துமதம் மீது காழ்ப்பை வளர்க்கும் அத்தனை அமைப்புக்களையும் அவற்றின் அத்தனை ஊழல்களுடன், அத்தனை குற்றக்கறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொண்ட கும்பல்கள்தான் இப்போது ஓரளவு உருவாகி வரும் இந்த அமைப்புக்கள் மீது அவதூறுகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன. இது எவ்வகையிலும் அறம் சார்ந்ததோ , எதிர்க்கருத்தியல்சார்ந்ததோ அல்ல. வெறும் பதற்றம் மட்டுமே.

ஒரு சின்ன அவதானிப்பைப் பாருங்கள். ஒருநாளில் உங்கள் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கக்கிடைக்கும் மதப்பரப்பு தொலைக்காட்சிகள் எத்தனை! கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புக்கள் எவ்வளவு! எவ்வளவு பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டவை அவை! எத்தனை செல்வம்!ஜக்கிக்கோ ரவிசங்கருக்கோ ஒரு தொலைக்காட்சி ஊடகம் இன்றில்லை. அதற்கான நிதி அவர்களிடம் இல்லை [எப்படியாவது நிதி திரட்டி அவர்கள் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது என் வலுவான கோரிக்கை. அந்த அமைப்புக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நம்மூர் முற்போக்குப்பகுத்தறிவுக்கு இந்தச் சின்ன அமைப்புக்கு எதிராக மட்டும் ஏன் இத்தனை காழ்ப்பு?  மிக எளிய பதில் இதுதான், ஐயப்பனைப்பற்றி பேசிய அந்த இளைஞன் இங்கு உருவாகி வந்திருக்கிறானே, அவனை கண்டுதான் இவை அஞ்சுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயமோகன்.