Tamilnadu

இரவோடு இரவாக பாஜக வேட்பாளருக்கு அண்ணாமலை முக்கிய அறிவுரை..! வெற்றி கிடைக்குமா?

Annamalai
Annamalai

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் சார்பில் போட்டுயிடும் வேட்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் நேற்றுஇரவு கடிதம் மூலம் முக்கிய அறிவுரை ஒன்றிணை வழங்கியுள்ளார் அது என்னவென்று பார்க்கலாம்!


உள்ளாட்சித் தேர்தல் என்பது வழக்கமான சட்டமன்ற பொது தேர்தலுக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கும் முற்றிலும் மாறுபட்டது. நாட்டைக் காக்க நடத்தப்படுவது சட்டமன்ற, பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள். நம் வீட்டையும் தெருவையும் காக்க நடத்தப்படுவது உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள்.

இதில் போட்டியிடும் நபர்கள் கட்சிகளுக்கும் சின்னங்களுக்கு அப்பாற்பட்ட நண்பர்களாய், உரத்த குரலில் அழைப்பதற்கு முன்னர் ஓடிச்சென்று மக்களுக்கு உதவிகளை செய்யும் தொண்டராய், அவசரத்திற்கு ஓடிவந்து உதவி செய்யும் அணுக்கத்தில்   இருப்பவர்கள் மக்கள் ஊழியராய் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

சமீபத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில், ஆளும் கட்சியாக திமுக இருந்த போதும், அதிமுக பாஜக கூட்டணி பல இடங்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களை எல்லாம் எதிர்த்து பெருவாரியாக வெற்றி பெற்றது. 

அந்த வெற்றியும், பெற்ற வாக்குகளும் இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, என்பதை மறுக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கட்சியை வளர்த்தெடுக்கவும், தாமரை சின்னத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், உள்ளாட்சித் தேர்தல்களில் பரவலாக அதிக தொகுதியில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்

ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்தாலும், இனிவரும் காலங்களில் நாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்து இருந்தாலும், கட்சியின் நலன் கருதி, தொண்டர்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்கி உற்சாகப்படுத்துவதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் நலன் கருதி, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, தனியாக களம் இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது

தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்பதற்கான ஒரு நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி தன் கட்சி தொண்டர்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. 

நம்முடன் கரங்களையும் மனங்களை யும் இணைத்து இதுநாள்வரை ஒன்றாக செயல்பட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் நாம் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நட்புள்ளம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  ஆனால், நம் கட்சியின் நலம் கருதி, அடிப்படை நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்ய, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது.

நம் தேசிய தலைவர்களின் நல்லாசியுடன் இந்த முடிவினை உறுதியாகவும், இறுதியாகவும் நாம் எடுக்க மிக முக்கிய காரணம், உற்சாகத்துடன் வேலை பார்க்க உத்தரவாதம் அளித்த உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல்.... கட்சிக்கான தேர்தல் இல்லை.  இது முற்றிலும் தொண்டர்களுக்கான தேர்தல்.இது நாள் வரை நான் கட்சியில் அதைச் செய்திருக்கிறேன், இதைச் செய்திருக்கிறேன் என்று சொல்லிய ஒவ்வொருவரும் தங்கள் சேவைகளின் தொண்டுகளின் உழைப்பின் பயன்களை ஓட்டுக்களாக வேண்டிய மிக முக்கியமான தொண்டர்களின் தேர்தல். 

ஆளும் கட்சியின் அராஜகங்கள் அத்துமீறி நடக்கும் தேர்தல். அதையும் தாண்டி ஜெயிக்க வேண்டிய ஆற்றலை நிரூபிக்கும் தேர்தல். பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் அனைவரும் சுவர்களில் எல்லாம் தாமரையை மலரச் செய்யுங்கள். வீடுகளில் கொடி பறக்கட்டும். அப்படிப் பறக்கும் போதுதான் நாம் ஆட்சி மன்றங்களில் கொடிகட்டிப் பறக்க முடியும்.

மத்திய அரசின் மகத்தான திட்டங்களை மக்களின் மனதில் இடம்­பெற செய்­யுங்­கள். ஆளும்கட்சியின் ஏமாற்றம் தந்த பொய்யான வாக்குறுதிகளை சுட்­டிக் காட்டுங்கள். பொங்கல் தொகுப்பு முதல் நீட் தேர்வு வரை எத்தனை ஏமாற்று வே­லை­களை அவர்கள் தொடர்ந்து செய்­கி­றார்­கள்! 

கமிஷன் கட்சியின் கைகளில், கார்ப்பரேஷன்கள் மாட்டிக்கொண்டால்.... நாவில் தேன் தடவி நயந்து பசப்பும் கட்சியின் கைகளில் நகராட்சி மன்றங்கள் சென்றுவிட்டால்.... பட்டியல் போட்டு கொள்ளையடித்து பழக்கப்பட்டவர் கைகளில் பஞ்சாயத்துக்கள் மாட்டிக்கொண்டால்... கார்ப்பரேஷன் காணாமல் போகும். நகராட்சிகள் நாசமாகும். பஞ்சாயத்துகள் பஞ்சம் பிழைக்கும். 

ஆகவே யாருக்கு ஓட்டு போடக் கூடாது என்பதை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதையுங்கள். நகர்ப்புறத்தில் நடைபெறும் தேர்தலில் 21 கார்ப்பரேஷன்களில், 1374 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 

138 நகராட்சிகளில் 3,843 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 490 பேரூராட்சி வார்டுகளுக்கான தேர்தலில் மொத்தம், 7621 பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 

12,838 பேர் வெற்றி வேட்பாளர்களாக வலம் வர இருக்கிறார்கள். அதில் ஒருவராக நீங்களும் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.தமிழகத்தில் மொத்தமாக 31,029 வாக்குச்சாவடிகள் அமைய இருக்கின்றன இதில் சென்னையில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன

.மாநகராட்சிப் பகுதிகளில் 1,54,84,607 வாக்காளர்களும், நகராட்சிப் பகுதிகளில், 64,92,735 வாக்காளர்களும், பேரூராட்சிப் பகுதி களில் 59,79,412 வாக்காளர்களும் இருக்கிறார்கள். இதில் 1,37,06,793 பேர் பெண்கள், 1,42,45,637 பேர் ஆண்கள், இதில் மூன்றாம் பாலினத்தவர் 4,324. இவர்கள் அனைவரும் தேர்தலைச் சந்திக்கிறார்கள் என்பதை விட, இவர்கள் அனைவரையும் நீங்கள் சந்திப்பதில் தான் நம் வெற்றி அடங்கி இருக்கிறது.

ஆகவே நம் தாமரைச்சொந்தங்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பு 100க்கு 100 இருக்கும் போது வெற்றியும் வாய்ப்பும் அதிகரிக்கும். இது என் 100வது கடிதம். நீங்கள் நூற்றுக்கு 100 வாங்க வேண்டும், உங்கள் வெற்றியை நானும் கொண்டாடவேண்டும் என்ற ஆவலில் இக்கடிதம் முடிக்கிறேன்  என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

More Watch Videos