கனிமொழியிடம் மனு கொடுக்க வந்தவரை தடுக்க சென்று தற்போது அண்ணாமலையிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன்.கனிமொழியிடம் மனு கொடுக்க வந்தவரை தடுக்க நீங்க யாரு? ஒரு வாரம் தான் உங்களுக்கு டைம் என அண்ணாமலை நேரடியாக வீடியோவை பகிர்ந்து எச்சரிக்கை கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, அண்ணாமலை தெரிவித்ததாவது.,
கோவில்பட்டி நகராட்சி இருபதாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் விஜயகுமார். கடந்த நான்கரை வருடங்களாக அவரது பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்றும், அவர் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தூத்துக்குடி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களிடம் மனு கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான சகோதரர் விஜயகுமார் அவர்களை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார்.திமுக உள்கட்சி அரசியலில், தன்னை கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன், இந்த ஆணவத்தை எல்லாம் அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைக்காக, பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுப்பதைத் தடுக்க நீங்கள் யார்?
ஒரு வார காலத்திற்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், தமிழக பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்துடன் கீதா ஜீவன் மனு கொடுக்க வந்தவரை ஒருமையில் பேசிய வீடியோ மற்றும் ஓவரா சீன் போடாத என குறிப்பிட்ட வீடியோவையும் அண்ணாமலை பகிர்ந்து இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சர் கீதா ஜீவன் கனிமொழி முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டது சாமானிய மக்களை முகம் சுளிக்க செய்து இருக்கிறது.
மனு கொடுக்கவந்த கவுன்சிலருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு என்ன நிலை என்று பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.