மனீஷ் சிசோடியாவுக்கு அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்வது உறுதியாகி இருப்பதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர், அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திடம் லஞ்சம் கொடுக்க முற்பட்ட போது போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிறகு டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், போர்டிஸ் மருத்துவமனையின் புரமோட்டர்களாக இருந்த மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் ஆகியோர் பெரும்பாலான பங்குகளை ஜப்பான் டாய்ச்சி சான்கியோ நிறுவனத்துக்கு முறைகேடாக விற்பனை செய்த காரணத்தால் சிறை சென்றனர். மல்விந்தர் சிங்கை சிறையிலுருந்து வெளியில் எடுக்க, அவரது மனைவி ஜப்னா சிங்கிடம் ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம், அவரது கனவரை வெளியில் எடுப்பதாக கூறி ரூ.200 கோடி பெற்று ஏமாற்றிய பணமோசடி வழக்கின் விசாரனைக்காக டெல்லி பாட்டியால ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று சுகேஷ் சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்பொழுது செய்தியாளர்கள் மனீஷ் சிசோடியா கைது நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுகேஷ் சந்திரசேகர், டில்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில்,
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மதுபான ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறினார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறை செல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்வது உறுதி என்று குறிப்பிட்ட சுகேஷ் சந்திரசேகர் கருத்து, அம்மாநிலத்தில் உள்ள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.