Tamilnadu

மிக மிக "சுவாரஸ்யம்" பேரூராட்சி தேர்தலில் திமுகவை வீழ்த்திய பாஜக..! கடைசி நேரத்தில் அதிரடி திருப்பம்..!

Annamalai and Stallin
Annamalai and Stallin

ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் சில இடங்களில் அசம்பாவிதம் மற்றும் போதிய கவுன்சிலர்கள் வராத காரணத்தால் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.


குமரி மாவட்டத்திலுள்ள 55 பேரூராட்சிகளில் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் மயிலாடி பேரூராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவரை கடத்தியதாக புகார் எழுந்த காரணத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது, மேலும் தலைவர் துணைத் தலைவர் தேர்தலை நடத்த போதிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 

மயிலாடி பேரூராட்சியை பொருத்தமட்டில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் . பாஜக . 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், திமுக இரண்டு வார்டுகளிலும் , காங்கிரஸ்  ஒரு வார்டிலும் சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஏற்கனவே தி.மு.க. விற்கு சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் ஆதரவு அளித்ததையடுத்து தி.மு.க.வின் பலம் 3 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரும், சுயேச்சை கவுன் சிலர்கள் 2 பேரும் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் தி.மு.க. வில் இணைந்தனர். 

இதையடுத்து தி.மு.க.வின் பலம் 7 ஆகஅதிகரித்தது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்றால் 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மேலும் ஒரு கவுன்சிலரின் ஆதரவு இருந்தால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றி விடலாம் என திமுக கணக்கு போட்டு இருந்தது இதையடுத்து ஒரு கவுன்சிலரின் ஆதரவை பெறுவதற்கு தி.மு.க. பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டுள்ளது. 

இந்தநிலையில், ஒத்திவைக்கப்பட்ட மயிலாடி பேரூராட்சி தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. அதில், 9 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும், 6 பேர் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால், பாஜக வேட்பாளர் விஜயலட்சுமி பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 இதனைத்தொடர்ந்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மயிலாடி பேரூராட்சி தலைவர் பதவி நீண்ட காலமாக திமுகவின் வசம் இருந்த நிலையில் தற்போது பாஜகவினர் கைபற்றியுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் இறுதியில் காங்கிரஸ் கவுன்சிலர் யாருக்கு வாக்களித்தார் என்ற மர்மம் தெரியாமல் திமுகவினர் குழம்பி வருகின்றனர். 8 வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது பாஜக கூடுதலாக ஒரு வாக்குகள் பெற்று அதிரடி நிகழ்த்தியுள்ளது.