பாஜக உத்திர பிரதேச தேர்தலை முன்வைத்து கடைசி கட்டத்தில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார் இளம் பத்திரிகையாளர் அருண் ரமேஷ் இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு :-
உபி தேர்தலுக்கு இரு வாரங்கள் மட்டுமே இருக்க பாஜக புதிதாக மாற்றுக் கட்சியினரை புயல் வேகத்தில் இணைத்து வருகிறது... கடந்த சில நாட்களில் மட்டும் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ், காங்கிரஸின் முன்னணி ஓபிசி தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என் சிங் போன்றோர் இணைந்தனர். வரும் நாட்களில் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவ்பால் யாதவ்வுக்கு நெருக்கமானவர்கள், ஏன் அவரே கூட பாஜகவில் இணையலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவுகிறது.
இதில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று ஆர்.பி.என் சிங் பாஜகவில் இணைந்த விழா. அழுத்தி கூறுகிறேன் ஆர்.பி.என் சிங் பாஜகவில் இணைந்த விழா. அவர் இணைந்தது அல்ல. காரணம், ஆர்.பி.என் சிங் பாஜகவில் இணைந்தது உத்தரபிரதேசத்தில் ஓபிசி மக்களை மேலும் தன் பக்கம் இழுக்கவும் ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்கவும் பாஜகவிற்கு உதவும். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஒன்றை பலரும் கவனிக்க தவறிவிட்டனர். அது, மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் முன்னணி தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா ஆர்.பி.என் சிங்கின் இணைப்பு விழாவில் பங்கேற்றது.
இதில் என்னப்பா இருக்கிறது ? என நீங்கள் கேட்கலாம். தேசிய அரசியலில் நுழைந்த பின், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நாம் தான் ஆள வேண்டும் என முடிவு செய்த மோடி-அமித்ஷா காம்போ, Congress Mukt Bharat எனும் formula-வை வகுத்தது. அதாவது காங்கிரஸ் எனும் பிரதான எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் குழப்பத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி வைத்து விட்டால், நமக்கு பிரதான எதிரியாக எவரும் உருவாக முடியாது. மற்றவை அனைத்துமே மாநில அளவில் சுருக்கிவிடும். காங்கிரஸ் மட்டும் வலு பெற்றுவிட்டால் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் போன்ற காங்கிரஸ்-பாஜக நேரடி போட்டி நிலவும் மாநிலங்களில் பாஜகவுக்கு நெருக்கடி அதிகரிக்கும். இந்த மாநிலங்களில் பாஜக கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 99% strike rate வைத்துள்ளது.
சரி இதற்கும் ஜோதிராதித்யா சிந்தியா அங்கு அமர்ந்திருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேட்கலாம். நான் யூகிப்பது என்னவென்றால். ஆர்.பி.என். சிங்கை பாஜக பக்கம் இழுக்க ஜோதிராதித்யா சிந்தியாவே மிக முக்கிய பங்காற்றி இருப்பார். அமித் ஷாவுக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் இருக்கும் நெருக்கம் உலகறிந்ததே., இது ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள assignment-டாக கூட இருக்கலாம். ஆனால் ஆர்.பி.என்.சிங் இணைப்பு விழாவில் தர்மேந்திர பிரதானே அவரை கட்சிக்குள் வரவேற்றார் சிந்தியா மூன்றாவதாக தானே உட்கார்ந்திருந்தார், எனக் கேள்வி எழலாம். தர்மேந்திர பிரதானும் அமித்ஷாவின் நெருங்கிய சகாவே. அவர் உபி பாஜக தேர்தல் பொறுப்பாளர்.
அவரும் இதே assignment-ல் இருந்திருக்கலாம். சிந்தியாவிற்கு இந்ந பணி கொடுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக வெளியே தெரியாமல் இருப்பதற்கு தர்மேந்திர பிரதான் பிரதானமாக நின்று அவரை கட்சிக்குள் வரவேற்றிருக்கலாம். ராகுல் காந்திக்கு பக்கபலமாக நின்றது 5 இளம் தலைவர்கள் (இளம் என்றால் 45-55களில், அதுதான் அரசியலில் இளம், ராகுலே இளம் தலைவர் தானே,..). அதன்படி ஜோதிராதித்ய சிந்தியா, ஜிடின் பிரசாதா, சச்சின் பைலட், ஆர்பிஎன் சிங், மற்றும் மிலிண்டு டியோரா. இதில் சிந்தியா முதலில் சேர, சில மாதங்கள் முன்பு ஜிடின் பிரசாதாவும் பாஜகவில் இணைந்தார். இதில் இந்தியாவின் பங்கு இருந்தது.
இதற்கு நடுவே சச்சின் பைலட் இணைவதாக இருந்தது. அப்போதும் சச்சின் பைலட் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது சிந்தியாவே. ஆனால், வசுந்தரா ராஜேவின் அடம் மற்றும் தனக்கோ தனது மகனுக்கோ பைலட் ஆபத்தாக வந்து விடுவாரோ என்ற பயத்தால் சச்சின் பைலட்டை சேர விடாமல் தடுத்தார். வசுந்தரா ராஜே சிந்தியா ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு அத்தை என்றபோதும், தனக்கு மிகவும் நெருங்கிய அமித்ஷாவுக்கு சாதகமாகவே ஜோதிராதித்யா சிந்தியா அதில் செயல்பட்டார். (வசுந்தரா ராஜேவுக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் பகையும் ஊர் அறிந்தது) ஆனால் அத்தை வென்று விட்டார்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும், விஷயத்திற்கு வருவோம். என்னுடைய யூகம் படி, காங்கிரஸில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை பாஜக பக்கம் இழுக்க ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு அமிர்ஷாவால் assignment கொடுக்கப்பட்டிருக்கலாம். விரைவில் மகாராஷ்டிராவை சேர்ந்த மிலிண்டு தியோராவும் பாஜகவில் இணைவார். அவரது ட்விட்டர் பதிவுகள் இப்போதே மோடி மற்றும் பாஜகவிற்கு அவ்வப்போது ஆதரவாக வந்து கொண்டிருக்கிறது.
அதன்பின், சச்சின் பைலட்டுக்கும் குறிவைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்தபின் ராகுலை நம்பி மீதமிருக்கும் இளம் தலைவர்களான தீபேந்திர் ஹூடா (ஹரியான முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடாவின் மகன்), கவ்ரவ் கோகோய் (அஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்யின் மகன்) போன்றவர்களுக்கும் குறிவைக்கப்படலாம். ஆனால், அவை வெற்றி பெறுமா என்பது உள்ளூர் அரசியலை பொறுத்ததே. ஹரியானாவிலும் பாஜக புதிய தலைமையை உருவாக்கி வருகிறது.
அதனால் இவையெல்லாம் சந்தேகம். ஆனால், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள assignment, இந்த உத்தரபிரதேச தேர்தலுடனோ, 2024 நாடாளுமன்றத் தேர்தலுடனோ நின்று விடாது. இது பாஜகவின் உள்ள அரசியலுக்கே மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். சிந்தியா, சிந்தியா அழைத்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாஜகவில் தற்போது 40-50களில் இருக்கும் தலைவர்கள் என அடுத்த 15 ஆண்டுகளுக்கு பாஜகவின் அரசியலில் முக்கிய பங்காற்றுபவர்கள் பெரும்பாலானோர் அமித் ஷாவுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள், இருக்கிறார்கள். சிந்திய மட்டுமின்றி மேலும் பலரும் இதற்கான நகர்த்தல்களை தொடங்கியிருக்கலாம்.
சிந்தியா (மபி), ஹிமந்த பிஸ்வா சர்மா (அஸாம்), பாபுலால் மராண்டி(ஜார்கண்ட்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), பொம்மை (doubt தான் இருந்தாலும்.., கர்நாடகா), பூபேந்திர படேல் (குஜராத்), கிஷன் ரெட்டி (தெலங்கானா), சுவெந்து அதிகாரி (மேற்கு வங்கம்), தர்மேந்திர பிரதான் (ஒடிஷா), அனுராக் தாக்கூர் (ஹிமாச்சல்), புஷ்கர் சிங் தமி (உத்தரகண்ட்), பிப்லாப்தேப் (திரிபுரா) போன்றோர் அமித்ஷாவின் நம்பிக்கை பெற்றவர்கள் மற்றும் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடன், டெல்லியில் பாஜக உருவாக்கி வரும் பர்வேஷ் சாஹெப், தமிழகத்தில் அண்ணாமலை, கேரளாவில் சுரேந்திரன், கர்நாடகாவில் தேஜஸ்வி சூர்யா போன்றோரும் இருப்பர். இவர்களெல்லாம் BL Santhosh-ன் productகள். That is BJP's 90% of the next generation leaders are in the Hands of Amit Shah. (இதில் யோகி ஆதித்யநாத் மிஸ்ஸிங். அங்கு தான் டுவிஸ்ட் இருக்கும்). அதாவது, மோடிக்கு பிந்தைய பாஜகவின் அரசியல் கணக்கை அமித்ஷா எழுத தொடங்கிவிட்டார்.
ஜோதிராதித்ய சிந்தியா என்பவர் சிறந்த அரசியல் தந்திரி மட்டுமின்றி மக்களை கவரும் தலைவரும் கூட. மத்திய பிரதேசத்தில் வருங்காலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பின் முதல்வராக அமர்த்தப்படுவார். இதனால் "சிந்தியா" குடும்பத்தில் வசுந்தரராஜே சிந்தியா ஒதுக்கப்பட்டாலும் ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலைப்படுத்தபட்டு, விமர்சனங்கள் தடுத்துநிறுத்த படலாம். இதனால் வசுந்தரராஜே அரசியலுக்கு முடிவு கட்டியது ஒன்று, பாஜக அபிமானிகளின் வெறுப்பு பெறாமல் தப்பியது ஒன்று என அமித்ஷா இரண்டு மாங்காய்களை அடித்து, கட்சி அரசியலில் மேலும் முன்னேறுவார்.
இது Team Amit Shah-வுக்கான தொடக்கம். இதில், யோகி ஆதித்யநாத், ஆர் எஸ் எஸ், மற்றும் நரேந்திர மோடியின் முடிவுகளும் காய்நகர்த்தல்களும் வரக்கூடிய 5, 6 ஆண்டுகளில் மிக முக்கிய கவனத்தைப் பெறும். மோடி 2014ல் பிரதமராகப் பதவியேற்றதற்கு 2013ல் பாஜக வால் அவர் முன்னிலைப்படுத்தப்பட தொடங்கியது காரணம் அல்ல. அதன் காய்நகர்தல்கள் 2009-10ல் அத்வானியின் ஜின்னா controversy முதலே முழுவீச்சில் தொடங்கிவிட்டது. எனவே, 2029ற்கு பிறகு யார் என்பதற்கான ஆட்டம் தொடங்கிவிட்டது.