
பிரதமர் மோடி இந்திய இராணுவம், உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் என மூவருக்கும் தனி தனியாக சொன்ன விஷயம் இப்போது பாகிஸ்தான் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
பிரதமரின் இல்லத்தில் சுமார் 90 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். எவ்வாறு தாக்குதல் நடத்துவது, எந்த இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும், எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம். இந்த விவகாரத்தில் முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம்" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன், எல்லை பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைவர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி இந்திய இராணுவம் பாகிஸ்தானில் உள்ளே இறங்கி பதிலடி கொடுக்கும் வேலையில் முழு கவனம் செலுத்த அஜித் டோவளிடம் பொறுப்பை கொடுத்து இருக்கிறார் அதே நேரத்தில் போர் நடக்கும் நேரத்தில் இந்தியாவில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது எனவும் நாட்டின் முழு சட்ட ஒழுங்கை பார்க்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பொறுப்பை கொடுத்து இருக்கிறார் மேலும் ஏன் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த காரணம் என்ன என கூறி உலக நாடுகள் ஆதரவை பெறவும் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அனைத்து முடிவுகளும் எடுக்க ஜெய்சங்கருக்கு உத்தரவு போட்டு இருக்கிறார்.
இவை அனைத்தும் நடந்த பின்பு RSS தலைவர் மோகன் பகவத்தை அழைத்து ஆலோசனை நடத்தி முழு வாருக்கு இந்தியா தயாராகி இருப்பதை விரிவாக விளக்கி இருக்கிறார் மோடி. மொத்தத்தில் இந்தியா இந்த முறை கொடுக்கும் பதிலடி பாகிஸ்தான் கனவிலும் நினைக்காத வகையில் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.