"ம்யூகோர்மைக்கோசிஸ்"ஏதோ மார்வல் ப்ரொடக்சன்ல வர்ற படத்தோட தலைப்பு மாதிரி இருக்கேன்னு கொஞ்சம் எட்டிப்பாத்தா கிலி பிடிச்சுடுது..கொஞ்சம் இல்ல ரொம்பவே சீரியசான விஷயம். நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு நம்மை சார்ந்தவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் தலையாய கடமையாகும்.
ஆம் பீடிகையில்லை இது..ப்ளாக் பங்கஸ் என அழைக்கப்படும் mucormycosis கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நபர்களை மீண்டும் தாக்குகிறது.குஜராத் டெல்லி மகாராஷ்டிரா என பரவி வந்த இந்த கொடிய வகை பூஞ்சை தமிழகத்திலும் ஆங்காங்கே பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
இந்த ப்ளாக் பங்கஸ் தாவரங்களிலும் மட்கிப்போன கனிமங்களிலும் கூட காணப்படும். கொரானா பதிப்பிலிருந்து மீண்டவர்களை எளிதாக தாக்குகிறது. இது ஸ்டீராய்டுகளை முறைப்படி எடுக்காத நோயாளிகளையே அதிகம் தாக்குகிறது.
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் அதிக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை மட்டுமே தாக்கி வந்த black fungus நோய் இப்போது கொரானா தீவிர பாதிப்பில் மீண்டு வந்த நோயாளிகளையும் தாக்குகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது குறித்து அகர்வால் மருத்துவமனைகள் குழுமத்தலைவர் அமர் அகர்வால் கூறும்போது.." கொரானா பாதிப்பில் மீண்ட அனைவருக்கும் இந்த black fungus நோய் தாக்காது. ஆனால் புற்றுநோய் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். இவர்களுக்கு கொரானா பாதித்தால் தீவிரசிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. இணை நோய் இல்லாதவர்களும் தீவிர தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு நுரையீரல் தொற்று உண்டாவதால் உயிரை காக்க அளவிற்கு அதிகமாக ஆக்சிசன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது.இதனால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தொற்றிலிருந்து மீண்ட பின்னர் கருப்பு பூஞ்சை நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த Black fungus நோய் உடலில் எங்கு வேண்டுமானாலும் பாதிக்கலாம்.கொரானாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் மூக்கு, வாய், கண்களின் கீழ் பகுதி என முகத்தில் தாக்குகிறது.இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் கண்பார்வை இழப்பு ஏற்பட்டு மூளை முழுவதும் பாதிக்கப்பட்டு உடனடியாக மரணம் சம்பவிக்கிறது.
தீவிர கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கடுமையான தலைவலி கண்வலி , கண்வீக்கம், கண்கள் சிவப்பாக மாறுதல், திடீர் பார்வை குறைபாடு, சைனஸ் , மூக்குவலி மற்றும் வாய் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகள் கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் " என்று தெரிவித்தார்.
அரவிந்த் கண்மருத்துமனை டாக்டர். உஷாகிம் (Chief of department of orbit,oculoplasty ocular oncology) கடந்த வெள்ளியன்று நடத்திய பிரஸ்மீட்டில்
"கருப்பு பூஞ்சை தாக்குதல் அரிதானது.ஆனால் தற்போது அதிகரித்துள்ளது. மதுரையில் வருடத்திற்கு 12 நோயாளிகள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வாரம் 12 நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கிறோம். பாதிக்கப்பட்ட எல்லா நோயாளிகளுக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை. அதுவே பாதிப்புக்கு காரணியாகிறது."
கண்பாதிக்கப்பட்டு மூன்றாவது ஸ்டேஜில் (late stage) ல் கடந்த வாரம் 12 நோயாளிகள் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர் ஆர்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.இதில் ஒரு ஆறுதலான விஷயம் கருப்பு பூஞ்சை கொரானா போல தொடுதல் மூலம் பரவுவதில்லை.
ஆனாலும் நம் பாதுகாப்பு என்பது எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டியதாகும். கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரிபார்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்ல அனைவரும் கவனமாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டியது நம் சமூக கடமையாகும்.தனித்திருப்போம். சமூக நலம் காப்போம்..!
உங்கள் #பீமா