2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்காக பல களப்பணிகளை செய்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு பகுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்தி தன் கட்சியின் பெருமைகளை இப்போதிலிருந்தே பறைசாற்றி வருகிறது. எதிலும் புதுமையை கையாளும் பாஜக இந்த களப்பணிகளிலும் தற்போது புதிய முறைகளை கையாண்டுள்ளது யாரும் இதுவரை நினைத்திறாத வேறுவிதமான ஆக்சன் பிளானில் பாஜக இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் அந்த பிளானை தென்னிந்தியாவான தமிழகத்தில் பாஜக செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆக்ஷன் பிளானின் பெயர்தான் 'மிஷன் சவுத்'. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென் மாநிலங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது, அதற்காக தொடங்கப்பட்டது தான் மிஷன் சவுத்.
பாஜக தனது செல்வாக்கை வடகிழக்கு மாநிலங்களில் விரிவுபடுத்தி உள்ள நிலையில் தெற்கில் கவனம் செலுத்தி நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழ்நாடு கேரளா ஆந்திரா போன்ற தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மிஷன் சவுத் என்ற திட்டத்தின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே தேசிய அளவில் இதுவரை சண்டை பிடித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, திட்டம் தீட்டுவதற்காக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாடு படி பாட்னாவில் முதல் எதிர்கட்சிகள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இவர்களெல்லாம் ஒரு மேடையில் இருப்பார்களா என்று மக்கள் யோசித்து சந்தேகத்தில் இருந்து கொண்டிருந்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து பேசியதுதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழகத்திலிருந்து திமுக கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான ஸ்டாலின் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தார் இருப்பினும் அது அவருக்கு திருப்தி அளித்ததாக தெரியவில்லை. மேலும் கூட்டத்திலும் உறுதியான எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பேசப்படுகிறது இந்த நிலையில் இதன் இரண்டாவது கூட்டமும் தற்போது தேதி குறிப்பிடப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஆளுங்கட்சியாக திமுக இருந்தாலும் அதற்கு எதிரான சூழ்நிலையை தற்போது நிலவி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமே பாஜகவின் மிஷன் சவுத் பிளான் திறம்பட செயல்பட ஆரம்பித்துவிட்டது என்று தான் கூற வேண்டும். அதோடு இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதுவும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கன்னியாகுமரி மற்றும் காசிக்கு இடையிலான உள்ள உறவை வலுப்படுத்த கலாச்சார தொடர்பு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கோவை தொகுதியிலும் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பாஜகவின் இந்த மிஷன் சவுத் திட்டத்தின் படி என்னென்ன அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இதன் காரணமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல முக்கிய தலைவர்கள் இனி வரும் காலங்களில் தமிழகம் வர உள்ளனர் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் பிரதமர் தமிழகத்தில் போட்டியிட்டால் தென்னிந்தியாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் பாஜக கூட்டணி வசமே செல்லும் எனவும் அதன் காரணமாகத்தான் அண்ணாமலை 39 தொகுதிகளும் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என கூறுகின்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது டெல்லி மேலிடத்தின் மொத்த கவனமும் தென்னிந்தியாவின் மீதுதான் இருப்பதாகவும் கூறுகின்றனர் பாஜகவினர்.