வடிவேல் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை வசனம் ஒன்றை பேசியிருப்பார் அதில் என்னையா செஞ்சான் என் கட்சி காரான்.. ராங் நம்பர்னா ராங் நம்பர்னு சொல்லு அதைவிட்டுட்டு இப்படியா அடிப்பது என திரைப்படத்தில் பேசுவார் அதை போன்ற பாணியில் அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார் கி.வீரமணி.
திராவிட கழக தலையவர் வீரமணி கொடுத்த அறிக்கை இணையத்தில் வைரலாக வருகிறது அதில், பெரியார் எழுதிய புத்தகத்தை பாஜகவினர் தடுத்தால் விநியோகம் செய்யக்கூடாதா? இந்த அரசாங்கமே பெரியார் வழியில் வந்தது தானே, முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அதை தானே சொன்னார் என ஆவேசமாக அறிக்கை கொடுத்துள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு :- பள்ளியில் தந்தை பெரியாரின் ‘’பெண் ஏன் அடிமையானாள்?’’ நூலை வழங்கக் கூடாதா? விவேகானந்தர் 152 ஆம் ஆண்டு என்ற பெயரில் கல்வி நிலையங்களுக்குள் புகுந்து ஆன்மிகக் கண்காட்சி நடத்தவில்லையா?
காவல்துறை அனுமதியின்றி முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? திருப்பூர் மேல்நிலைப்பள்ளி நூலகம் ஒன்றுக்கு விரும்புவோர் புத்தகங்களைத் தானமாக வழங்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்ததன் அடிப்படையில், தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூலான ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற நூலை ஆர்வமுள்ள தோழர்கள் அளித்துள்ளனர்.
இதனை அறிந்த பா.ஜ.க.வினர் சிலர், அந்தப் பள்ளியை முற்றுகையிட்டதாகவும், அந்த நூலை ஏற்கக் கூடாது - மாணவர்களுக்கும் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தியதன் அடிப்படையில், கல்வி அதிகாரிகளும் தலையிட்டு அந்நூலை மாணவர்களுக்கு விநியோகம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில், முற்றுகையிட்டோர் கலைந்து சென்றனர் என்று இன்று (12.11.2021) செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற புகழ்பெற்ற நூல் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. தடை செய்யப்பட்ட நூலா? இந்த நூல் ஏதோ தடை செய்யப்பட்ட ஒன்று என்பதுபோல மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸை உள்ளடக்கிய சங் பரிவார்கள் கூக்குரலிடுவதும், பள்ளியை முற்றுகையிடுவதும் எந்த வகையில் சரியானது?
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, உறுதிமொழியும் அரசு அலுவலர்கள் எடுக்கவேண்டும் என்று அரசு ரீதியாக ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 அன்று அவ்வாறே அரசு அலுவலகங்களில் உறுதி மொழியும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் நூலை நூலகத்திற்கு வழங்கக் கூடாது, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யக் கூடாது என்று வற்புறுத்த, போராட்டம் நடத்திட, முற்றுகையிட அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? முன் அனுமதியில்லாமல் பள்ளியை முற்றுகையிட்டவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைது செய்யாதது ஏன்? அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களிடம் பணிவது என்ற நிலை தொடர்ந்தால், நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை தலைவிரித்து ஆடாதா?
விவேகானந்தரின் ஆன்மிகக் கண்காட்சி பள்ளிகளில் நடத்தப்படவில்லையா? விவேகானந்தர் 152 ஆம் ஆண்டு என்ற பெயரில் பிரச்சார வாகனம் தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கூடங்களில் எல்லாம் சென்று பிரச்சாரம் செய்யப்படவில்லையா? ஆன்மிகக் கண்காட்சி நடத்தப்படவில்லையா? அதெல்லாம் எதன் அடிப்படையில்?
தமிழ்நாட்டின் தந்தையல்லவா பெரியார்! சங் பரிவார்க்கு ஒரு நீதி- 95 ஆண்டுகாலம் வாழ்ந்து மக்களின் சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும், பெண்ணடிமை ஒழிப்புக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் பாடுபட்டு, மிகப்பெரிய அளவில் சமூக மாற்றத்திற்குக் காரணமான தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூல் பள்ளி நூலகத்தில் இடம்பெறுவதோ, மாணவர்களிடத்தில் பரவுவதோ குற்றமான செயலா? இது எந்த நீதி?
பள்ளிகளுக்கெல்லாம் சென்று யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி என்றெல்லாம் நடத்தப்படுகிறது இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று முதலமைச்சர் அண்ணாவால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதே! இது சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு என்று முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தப்படவில்லையா?
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் என்று அறிவித்தது - நடைபெறும் ஆட்சி. தமிழ்நாட்டின் தந்தை - பெரியார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிமன்றத்தில் சொன்னதுண்டு சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்! சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் வீறுநடை போடும் ஓர் அரசு அமைந்த நிலையில், தந்தை பெரியாரை சமூக விரோதிபோல சித்தரிக்கும் சிறு நரிக் கூட்டத்தின் சட்ட விரோத, நியாய விரோத செயல்களை அனுமதிக்கக் கூடாது.
சங் பரிவார்கள் பல இடங்களிலும் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது அரசின் கவனத்திற்கு வந்திருக்கும் - சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் பள்ளி கல்வித்துறை தரப்பில் பெரியார் நூலை பெற்று கொண்டால், பாஜகவினர் தங்கள் பங்கிற்கு பகவத் கீதை கொடுப்போம், பகவத் கீதை ஒன்றும் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல, மேலும் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் குறித்த புத்தகத்தை கொடுப்போம் என்று கூறுகின்றனர் இதனால், எந்த புத்தகத்தையும் வாங்கவேண்டாம் என முடிவெடுத்தோம் என அரசல் புரசலாக மேலிடத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
MORE FROM TNNEWS24 DIGITAL - YOUTUBE/FACEBOOK