
இராமர் கோவில் காசி விஸ்வநாதர் கோவில் எல்லாம் எதிர் வருகின்ற சட்டசபை தேர்தலை மனதில் வைத்து நடைபெறுகின்றன என்கின்ற வீரமணியின் விமர்சனம் வடமாநில மக்களின் கிண்டலை பெற்றுள்ளது இதுகுறித்து வீரமணி தெரிவித்ததாவது :- ராமன் கோவில், காசி கோவில் புனருத்தாரனம் என்பது எல்லாம் உ.பி., உத்தரகாண்ட் தேர்தலுக்காகவே! ஆட்சிச் சாதனையைச் சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத நிலையில், சனாதனமும் - மதத்தையே நம்பி இத்தகைய வியூகம்!தேர்தலில் மதத்தைப் புகுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பகிரங்கமாக - பதவி ஏற்பு விழாவின்போது பிரமாணம் - முறைப்படி - எடுத்ததோடு- மேடையிலிருந்து இறங்கிய பிரதமர் மோடி கூடுதலாக ஓர் அரசமைப்புச் சட்ட உருவகத்தின்மீது மண்டியிட்டு வணங்கி திரும்பி வந்து மேடையில் அமர்ந்தார். அதுபோலவே பகிரங்கமாக, மதச்சார்பற்ற அரசு என்ற முகப்புரையின் தத்துவத்தை காலில் போட்டு மிதிப்பதுபோல, இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, வாரணாசி காசி விசுவநாதர் கோவில் புனருத்தாரனம் அனைத்துக்கும் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் என்று நீள் பாதை, இத்தியாதி, இத்தியாதி! பகிரங்கமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தத்துவப் பக்கங்களைக் காவி ஆட்சியின் கறையான்கள் வெளிப்படையாக அரித்து வருகின்றன! சனாதன தர்மம் நிலைக்க இந்த ஏற்பாடு என்று பிரதமர் புகழுரை மூலம் கூறுகிறார்! ராமர் கோவில், காசிக் கோவில் புனருத்தாரனம் - எல்லாம் உ.பி., உத்தரகாண்ட் தேர்தலை நோக்கியே!
பா.ஜ.க. கட்சித் தலைவர் நட்டா என்பவர், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்களையெல்லாம் வாரணாசிக்கு வரவழைத்து, காசி விசுவநாதர் கோவில் தொடங்கி, அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோவிலுக்குச் சென்றும் வணங்கி, பக்திப் போர்வையில் செய்யப்படுவனவெல்லாம் 2022 இல் வரவிருக்கும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஹிந்துத்துவாவை மய்யப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற இது ஒரு மறைமுக வியூகம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்!
மத்தியப் பிரதேசத்திலிருந்து சென்றுள்ள பா.ஜ.க. முதலமைச்சர் சவுகான், இந்தியாவின் புத்தாக்கத்திற்குரிய அடையாளம் இந்த கோவில்கள் - இராமனுக்குக் கோவில் போன்றவை; அது மட்டுமல்ல, சனாதன தர்மத்தின் புத்தெழுச்சி என்றும், நாட்டின் புனருத்தாரனம் இதன்மூலம் என்றெல்லாம் பேசியுள்ளார்! இராமஜென்ம பூமியில் கோவில் கட்டப்படுவதுதான் சனாதன தர்மத்தின் புத்தெழுச்சி என்று கூறுவோர் பழைய சனாதனத்தைக் கடைப்பிடிக்கிறார்களா? சனாதனத்தைக் காக்க விஞ்ஞான உத்திகள் ஏன்?நவீன விஞ்ஞானத்தின்மூலம்தானே இவற்றை உருவாக்குகிறார்கள்; அதுவே இவர்கள் சனாதனம் தோற்றுவிட்டது; மாறிவிட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா? ‘‘சனாதனம்‘’ என்றால், மாறாதது என்று பொருள்! வடமாநிலங்களில் மதவெறியைத் தூண்டி, பக்திப் போதையை ஊட்டி எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே இந்த பக்தி வேஷம் மும்முரமாக!
எதிர்க்கட்சிகளும்கூட மதச்சார்பின்மைக்குத் தற்காலிக விடுமுறை அளிப்பதுபோல, மத விஷயத்தில் தாங்கள் எப்படிப் பெரும் பங்கை அடைவது என்றுதான் போட்டி போட முந்துகிறார்களே தவிர, மதச்சார்பின்மை - செக்குலரிசம் என்பதைப் புறந்தள்ளிவிட்டு, அதே சேற்றை லேசாகப் பூசிக்கொண்டு, போட்டியிடவே விரும்புகின்றனரே தவிர, அறிவு கொளுத்த - அளிக்க எவரும் தயாராக இல்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது! ஓநாய் சைவமாகிவிட்டதா? உத்தரப்பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆட்சியின் சாதனைகளைக் காட்டி, வாக்குகள் பெற இயலாது என்று தெரிந்தே, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார்கள் - அதை நம்பி, ‘‘ஓநாய் சைவமாகிவிட்டது; பா.ஜ.க. மாறிவிட்டது’’ என்று நினைத்தால், அதைவிட பெருத்த தப்புக் கணக்கு வேறு இருக்கவே முடியாது!
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் இவற்றில் ஜாதி அரசியலை முன்பு நடத்தி, பிரித்தாண்டு சென்ற தேர்தலில் பா.ஜ.க. வியூகம் வகுத்து வெற்றி பெற்றது. இப்போது அந்த ‘பாச்சா’ பலிக்காது என்பதைப் புரிந்துகொண்டதால், இராமன் - பக்தி - கோவில்மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே இந்த உத்திகள்! மதத்தைத் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்ற விதி என்னாயிற்று இராமனின் ஆட்சி இராமராஜ்ஜியம். அதில் சூத்திர ‘சம்பூகன்கள்’ ஜாதி தர்மத்தை மீறியதால் தலை வெட்டப்பட்டார்கள் என்ற புராணம் புதுப்பிக்கப்பட, ஒடுக்கப்பட்ட மக்களே, பாதிக்கப்பட்ட, சிறுபான்மை மக்களே ஏமாறலாமா? தேர்தல் விதிகளில் இடம்பெற்றுள்ள, தேர்தலுக்கு மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்ட விதிகள், காற்றில் பறந்துவிட்டனவோ!
அய்தராபாத்திலிருந்து வெளிவரும் ‘‘டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் இதே கருத்தைப் பிரதிபலித்து, ‘‘அரசியலும், மதமும் பிரிந்தே இருக்கவேண்டும்; ஆனால், இந்திய அரசியலில் இது தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பது பரிதாபத்திற்குரிய செய்தி!’’ என்று குறிப்பிட்டுள்ளது. வெட்கம்! மகாவேதனை என குறிப்பிட்டுள்ளார் வீரமணி. சரி இதெல்லாம் இருக்கட்டும் ஈவேரா சாதியை ஒழித்தார் என்று கூறுகிறீர்களே அது என்ன சாதி, திராவிட கழகத்தின் அடுத்த தலைவராக எந்த மதத்தை குறிப்பாக இந்து அல்லாத முஸ்லீம் கிருஸ்தவர் போன்றோர் எப்போது வருவார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் வீரமணியின் குற்றசாட்டை கேட்டு சிரிக்கும் வடமாநில மக்கள்.