24 special

இந்த பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் இங்கு வேண்டாம் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை..!

Krishnasamy and stallin
Krishnasamy and stallin

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை அனுமதித்தால் பயற்சி மையங்கள் அதிகரிக்கும் என்ற பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு வேண்டாம் உடனடியா தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என  கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-


மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத்தேர்வு கூடாது - தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்!தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை மாநில அரசு பறிக்கக் கூடாது! திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள கடல்சார் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்டு இந்தியாவில் ஏறக்குறைய 54 மத்திய பல்கலைக்கழகங்கள் உண்டு.

அதில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியன வெளியில் தெரிந்த பிரசித்தி பெற்ற மத்திய பல்கலைக்கழகங்கள். இதுமட்டுமின்றி பல மத்திய பல்கலைக்கழகங்கள் இந்திய அளவில் தலைச்சிறந்து விளக்குகின்றன. டெல்லியில் மட்டும் ஏழு மத்திய பல்கலைக் கழகங்களும், உத்தரப்பிரதேசத்தில் ஆறு மத்திய பல்கலைக்கழகங்களும், பீகாரில் நான்கு பல்கலைக்கழகங்களும், அதேபோல பல மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கித் தரமான பேராசிரியர்களைக் கொண்டு, சிறந்த கல்வியைக் கொடுப்பதே மத்திய பல்கலைக்கழகங்களில் தலையாய நோக்கமாகும். அதற்கு உதாரணமாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், டெல்லி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பயின்ற மாணவர்கள் பெருமளவிற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசின் உயர் பதவிகளுக்கு எளிதாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அது தமிழக மாணவர்களுக்கும் சாலப் பொருந்தும். ஏனெனில் இன்று வரையிலும் ’ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதற்கு இணங்க, பல தமிழக மாணவர்கள் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக் கழகத்தைத் தேர்வு செய்வதுடன் அவர்கள் யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற மத்திய தேர்வாணைய தேர்வில் பெறும் வாய்ப்பையும் அதிகம் பெற்று வருகிறார்கள்.

மத்திய பல்கலைக்கழகங்கள் மத்திய அரசினுடைய பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் நேரடி கண்காணிப்பில் இயங்குகின்றன. விதிவிலக்காக ஒன்று இரண்டைத் தவிர, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் ஊழல்களின்றி தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கே கல்வியை வணிகமாக்கும் எவ்விதமான பாடத்திட்டங்களும் இருப்பதில்லை.

இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான அனைத்து வாய்ப்புகளும் ஒரே வளாகத்திற்குள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ஒரு மாணவன் இளங்கலை படிக்க மத்திய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துவிட்டால் உயரிய தரமான உயர் கல்வி பெற்று வெளியே வர முடியும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியாவில் இது போன்ற உயர்தர மத்திய பல்கலைக்கழகங்கள் நாளந்தா போன்ற பகுதிகளிலிருந்ததால்தான் இந்தியா அன்றே சிறப்பு மிக்க தேசமாக விளங்கியது. இன்று இருப்பதைக் காட்டிலும், இளைய தலைமுறையினருக்கு வரும் காலங்கள் சவாலானதாக இருக்கும். பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் மட்டுமே வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்காது.

இளைஞர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் பெருமைகளும் சேர்ந்தே அவர்களுக்கு வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களின் பெயர்கள் எவ்வாறு பெருமையை அளிக்கிறதோ, அதே போல நம்முடைய மாணவர்களுக்கும் தரமான கல்வியைத் தரும் பல்கலைக்கழகங்களும் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குப் பக்கபலமாக இருக்கும். மேலும், உயர்கல்வி குறைந்த செலவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுவரை டெல்லி, பம்பாய் போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கின்ற மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதே என்று நாம் பெருமைப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய பல்கலைக் கழகங்களைக் கூட தமிழகத்தினுடைய அனைத்துப் பகுதி மாணவர்களும் எளிதாக வந்து செல்லக்கூடிய வாய்ப்புள்ள இடத்தில் அமைக்காமல் இன்று வரையிலும் போக்குவரத்துக்கள் நல்ல நிலையில் அமையாத, திருவாரூருக்கு அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது.

2009ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது வரவேற்றார்கள். அப்போது திராவிட ஆட்சிதான் தமிழகத்திலிருந்தது. அது திராவிடர் மாடல் ஆட்சியா? இல்லையா? என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும்.மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட பொழுதே, பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை உட்பட அனைத்தும் மத்திய அரசிற்கு உட்பட்டது என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

கடந்த 13 ஆண்டுகளாக அங்கு எல்லாம் சரியாகத்தானே  போய்க்கொண்டிருக்கிறது. இதுவரையிலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மத்திய பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தார்கள். தமிழக மாணவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஊட்டப் படாததால் திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தினுடைய வாய்ப்பைக் கூட முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல ஜவஹர்லால் பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகத்தை மட்டுமே நமது மாணவர்கள் நாடிச் சென்றார்கள்.

தமிழகத்திலே அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றில் பயில மத்திய அரசு ஒரு அருமையான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. ஒரே ஒரு ஆன்லைன் மூலமாக எழுதக்கூடிய தேர்வின் மூலமாக மட்டுமே இந்தியாவில் இருக்கக்கூடிய 54 பல்கலைக்கழகங்களில் எதில் வேண்டுமென்றாலும் பயிலச் செல்லக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இது ஒரு அரிய சந்தர்ப்பம். இந்தியாவில் - தமிழகத்தில் நல்ல கல்வி கிடைக்காதா? என்று ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களின் கனவை நிறைவேற்றக் கூடியதாகவே மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு ஆன்லைன் தேர்வு நடத்துகிறார்கள். மாநிலத்திற்குள்ளும் நல்ல கல்வி கிடைக்காது.

அதைத் தாண்டி இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்விக்கூடங்களில் பயில்வதற்கும், முட்டுக்கட்டை போடக்கூடிய வகையில், வழக்கம்போல இன்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்தத் தீர்மானம் மத்திய பல்கலைக்கழகங்களுடைய மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தாது என்பது வேறு. எனினும், திமுக தொடர்ந்து கடந்த 60 வருடங்களாக மாணவர்களின் கல்வி மீது மட்டுமே குறி வைப்பதேன்? என்பது மட்டுமே கேள்வி.

மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் அன்றாட இயக்கத்தில் மாநில அரசுக்கு எவ்வித செலவும் கிடையாது. அனைத்துவித கட்டமைப்புகளும் கொண்ட ஒரு கல்விக் கூடத்தில் பயில்வதற்கு உண்டான தமிழக மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை - உரிமையைக் கூடத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில், ’ஆட்சியில் இருக்கிறோம்’ என்ற ஒரே அடிப்படையில் திமுக அரசு இப்படி நடந்து கொள்வது எவ்விதத்தில் நியாயம்? தமிழக மாணவர்கள் பரந்து விரிந்து எங்கெல்லாம் நல்ல கல்வி கிடைக்கிறதோ அதைப் பெற ஊக்குவிப்பது சரியானதா?

அல்லது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்கள்’ வற்புறுத்துவதா? மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் பயில்வதற்கு ஆன்லைன் மூலமாக நுழைவுத் தேர்வு எழுதுவதை ’கல்வி உரிமைமீது ஒன்றிய அரசின் தாக்குதல்’ என்று கூறக் கூடியவர்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை ஏற்று, இந்திய இறையாண்மை மீது சத்திய பிரமாணம் செய்து நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவும், பின் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் செல்வதும் கூட அடிப்படையில் தவறுதானே.

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிக் கொள்ளலாம்; கூட்டணி அமைத்தால் பெரிய பெரிய பதவிகளை அபகரித்துக்கொள்ளலாம்; லட்சோப லட்சம் கோடிகளில் மிதக்கலாம். ஆனால், அவர்களுடைய கூற்றுப்படியே ’பிற்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் (இருளர், நரிக்குறவர்களும் ஏதாவது ஒரு பட்டியலில் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ?) இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் ஊரை விட்டுச் சென்று வெளியில் ஒரு நல்ல கல்வியை கற்று விடக்கூடாதா?

இதுதான் திமுகவின் திராவிட மாடலா?மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய பல்கலைக்கழக தேர்வு முகமை இன்னொன்றையும் சொல்லி இருக்கிறது. ஒன்று அந்தத் தகுதித் தேர்வுகளின் முடிவுகளையே மாநில பல்கலைக்கழகங்களுக்கும் தேவை என்றால் எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இன்றுவரை சொல்லவில்லை. அடுத்து இன்னொன்றையும் சொல்கிறார்கள், 12ஆம் வகுப்புவரை படித்த மாணவர்களின்  மதிப்பெண்ணைக் கணக்கிலே கொள்ளாமல் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

அதேபோல, புற்றீசல் போல ’பயிற்சி மையங்கள்’ தோன்றி இருக்கின்றன என்றும் சொல்கின்றனர். இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் இருக்கிறது, மேலும் ”12-ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பாடத்திட்டத்தை நன்கு படிக்காமல் புரியாமல் எவரும் அந்த நுழைவுத் தேர்வை எழுத முடியாது. எனவே, +2 வரையிலான    படிப்பு வீணாகிறது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போது தமிழக பாடத்திட்டம் திருத்தப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறார்கள். எனவே, மொழிப் பிரச்சனை எழாது. ஊழல், சிபார்சுகளின்றி தகுதி, திறமைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமெனில், நுழைவுத் தேர்வு இல்லாமல் முடியவே முடியாது. இணையவழி தேர்வு எழுதுவது மூலமாக எட்டுக் கோடி தமிழ் மக்களின் தமிழ்ப்பற்றும் அழிந்து போய்விடாது; தமிழ் அடையாளமும் மங்கிப் போய் விடாது.

இந்தியா முழுவதும் உள்ள 54 பல்கலைக்கழகங்களிலும் தமிழக மாணவர்கள் பிரகாசித்திட அனைத்து கதவுகளும் திறந்து விடப்படும் அரிய வாய்ப்பாகவே இதைக் கருத வேண்டும்.

நுழைவுத் தேர்வுகள் வைக்கப்படுவதன் மூலமாக புற்றீசல்போலப் பயிற்சி மையங்கள் உற்பத்தியாகி விடும் என்ற அரசின் கவலை உண்மையாக இருக்கும் பட்சத்தில் பயிற்சி / டியூசன் மையங்களைக் கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள் உண்டு; பயிற்சி மையங்களை வரைமுறைப்படுத்த முடியும். அதை தமிழக அரசு உடனடியாகச் செய்யலாம்.

எனவே, பயிற்சி மையங்கள் உருவாகிவிடும் என்று ஒரு அச்சுறுத்தலைப் பூச்சாண்டி காட்டிக் கொண்டே, மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது ஒரு ஆட்சிக்கு அழகல்ல. மத்திய பல்கலை கழகத்திற்கு நடக்கும் இணையவழி தேர்வில் தமிழக அரசு ஏன் வீணாக தன்னுடைய மூக்கை நுழைக்க வேண்டும்? தேவை இல்லாமல் கல்வியில் திமுக அரசு அரசியல் செய்வது தேவையற்றது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, வாழ்வுரிமை, சொத்துரிமை என்பதைப் போன்று நல்ல கல்வி பெறும் உரிமையும் தலையாய அடிப்படை உரிமையாகும். நல்ல கல்வியைக் கொடுக்க முடிந்தால் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நல்ல கல்வி கிடைப்பதற்கு வழி வகை வேண்டும். அதை விடுத்து நல்ல கல்வியை பெற மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எவ்விதத்திலும் திமுக அரசு வழி மறைக்கக் கூடாது என எச்சரிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.