"கட்சியின் லட்சுமண ரேகையை யார் தாண்டுகிறார்களோ, யாரையும் விடமாட்டேன். இது ஆரம்பம்தான்" என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
பாஜ.,வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நேற்று வெட்ட வெளிச்சமானது. அதில் சூர்யா, பெண் நிர்வாகி டெய்சியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி வைரலானது. அந்த ஆடியோவில் பேசியது சூர்யா தானா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை என்றாலும், அவர் மீது பாஜக மாநில தலைவர் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க சூர்யாவிற்கு 1 வாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சூர்யா மீது விசாரணை நடத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார். அத்துடன் திருச்சி சூர்யா விஷயத்தில் வாண்டடாக வந்து வாயைக் கொடுத்த காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். அவருடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக போன்ற கட்சிகள் பெண் உறுப்பினர்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதற்கட்ட விசாரணை நாளை திருப்பூரில் தொடங்குகிறது. இருவரையும் அழைத்து பேச உள்ளனர். தவறு யார் செய்திருந்தாலும் விடப்போவதில்லை. திருச்சி சூர்யா தவறாக பேசியது தெரியவந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்தார்.
இருதரப்பினரும் தனிப்பட்ட முறையில் பேசியதாக கூறினாலும் கூட கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டு தனிப்பட்ட உரையாடல் என்ற காரணத்திற்காக விட்டுவிடமாட்டேன் என உறுதியளித்தார். மேலும் காயத்ரி ரகுராம் விவகாரம் பற்றிக் கூறிய அண்ணாமலை, கட்சி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கட்சியின் லட்சுமண ரேகையை யார் தாண்டுகிறார்களோ, யாரையும் விடமாட்டேன். இது ஆரம்பம் மட்டுமே. யாரெல்லாம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை பாயும். யாரையும் நான் விட மாட்டேன் என அண்ணாமலை எச்சரித்துள்ளார். பாஜக அனைவருக்குமான கட்சி, இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. என்னுடைய தலைமையில் அது நடக்காது என உறுதியாக தெரிவித்துள்ளார்.
- annakizhi