Tamilnadu

மரணத்தில் கூட இப்படியா? தீயாய் கொதித்தெழுந்த டாக்டர்.கிருஷ்ணசாமி! நடந்தது என்ன?

insurance lic
insurance lic

உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளதால், அங்குள்ள பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி  வருகின்றனர். அந்த வகையில் உக்ரைனில் இருந்து போலந்து வந்தவர்கள், அதன் எல்லையிலிருந்து பிற பகுதிகளுக்கு ரயில் வழியாக இடம் பெயரக் காத்திருந்த கருப்பினத்தைச் சார்ந்த பெண்களும், இந்திய; குறிப்பாக தென்னிந்திய மாணவிகளும் ரயிலில் ஏற விடாமல் உக்ரைன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்ற செய்தி வெளியாகி பெரும் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு  உள்ளார்.


அதில் உக்ரைன் – போலந்து எல்லையில் கருப்பின பெண்மணி மற்றும் தென்னிந்திய மாணவியை இடித்துத் தள்ளி ரயில் ஏற விடாமல் தடுத்த உக்ரைன் அதிகாரிகள்!இன – நிற வேறுபாடு மேற்கத்திய வெள்ளையர்களின் மனதிலிருந்து போர்க்களத்திலும் போகாதா? மரணத்திலும் மறையாதா?உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்ததிலிருந்து கடந்த நான்கு தினங்களாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி சாரை சாரையாக ருமேனியா, போலந்து போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர்.இந்தியாவிலிருந்து பெரும்பாலும் மருத்துவம் படிக்கச் சென்ற மாணவ - மாணவியர்கள் திடீரென போர் மூண்டதால் அவரவர் தங்கியிருந்த வீடுகள் மற்றும் கல்லூரி வளாகங்களிலிருந்து வெளியேற்றி அவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உக்ரைனிலிருந்து  உக்ரைனியர்களும், அந்நாட்டில் வாழ்ந்து வரக்கூடிய ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படக்கூடிய கருப்பின மக்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் படிக்கச் சென்ற பெரும்பாலான தென்னிந்திய மாணவ - மாணவியர்களும் அந்நாட்டு மக்களோடு மக்களாக உக்ரைனிலிருந்து வெளியேறி போலந்து  எல்லையில் குவிகிறார்கள்.

போலந்து மற்றும் ருமேனியா நாடுகளில், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித விசா இல்லாமலும் உள்ளே வரலாம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ருமேனியா, போலந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ரயில் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.போர் பதட்டம் என்பது சாதாரணமாக எல்லா மக்களையும் பாதிக்கக்கூடியது. 

இதில் ஏழை - பணக்காரன், கருப்பு - வெள்ளை என்ற எவ்வித பாகுபாடும் கிடையாது. இச்சூழலில் நேற்றைய தினம் உலக செய்திகளை வெளியிடும் பிபிசி தொலைக்காட்சியில் வந்த செய்தி (https://twitter.com/bbcworld/status/1497981791675813893?s=21)  மிக்க அதிர்ச்சி அளிக்கிறது; மிகவும் கவலை அளிக்கிறது. போலந்து எல்லையிலிருந்து பிற பகுதிகளுக்கு ரயில் வழியாக இடம் பெயரக் காத்திருந்த கருப்பினத்தைச் சார்ந்த பெண்களும், இந்திய; 

குறிப்பாக தென்னிந்திய மாணவிகளும் ரயிலில் ஏற விடாமல் உக்ரைன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது. கைக்குழந்தையுடன் ரயில் ஏற வந்த கருப்பினப் பெண்மணி தடுத்து நிறுத்தப்பட்டு தள்ளி விடப்பட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி ஆவேசமாக ’நான் கறுப்பினத்தைச் சார்ந்தவள் என்பதற்காகவா என்னைத் தள்ளி விடுகிறீர்கள்?’ என உக்ரைன் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்பது பிபிசி வெளியிட்ட செய்தியில் தெள்ளத் தெளிவாகக் கேட்கிறது. 

அதேபோல, கேரளாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவியும் ரயிலில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது மட்டுமல்ல,  கடுமையாக தாக்கப்பட்டும் இருக்கிறார். இந்த சம்பவத்தை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்திய அரசு இதனுடைய உண்மைத் தன்மை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

நேற்றைய முன் தினம் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைக் கண்டிக்காமல் இந்தியா நடுநிலை வகித்ததை தாங்கிக் கொள்ளாத உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த கோபத்தையும், வெறுப்பையும் இனப்பாகுபாட்டோடு இந்திய மாணவிகள் மீதும், கருப்பின மக்கள் மீதும் காட்டப் பட்டதாகவே கருத்துக்கள் வெளியாகின்றன.

அது மட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனிலிருந்து வெளியேறும் இந்திய மாணவ, மாணவிகளை உக்ரைனிலேயே தங்கி இருக்க கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்கு.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எனினும், இந்தப் போரை உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன் மக்கள் மீது அனைவரும் அனுதாபத்தைக் காட்டுகிறார்கள். உலகத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் சர்வதேச பிரச்சனைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். 

இது போன்ற அசாதாரண சூழல்களில் கண்டிக்க வேண்டி இருந்தாலும் கூட, கண்டிக்காமல் இருப்பதற்கும் எத்தனையோ காரணங்கள் இருக்கும். எனவே, ஐ.நாவில் இந்தியா நடுநிலை வகிக்கிறது என்றால் அது இந்திய நாட்டினுடைய வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம்; 140 கோடி மக்களின் வாழ்வுரிமை மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயம்.

உக்ரைன் இப்பொழுது போரிலே  சிக்குண்டு விட்ட காரணத்தினால் மட்டுமே இந்தியா தடாலடியாக ஒரு முடிவை எடுத்து விட முடியாது. ஆனால், இந்த வெறுப்பு மேல்மட்டத்திலிருந்தால்  கூட பரவாயில்லை. ஆனால், ஒரு எல்லையிலே இருக்கக்கூடிய சாதாரணமான அடிமட்ட உக்ரைன் அதிகாரி வரையிலும் அது ஆழப்பதிந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய நாட்டவர்கள் சாதாரண ஒரு பிரஜையாக இருந்தாலும் கூட ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் நலன், தங்களது நாட்டின் நலன் சார்ந்து முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து இந்திய மக்கள் எப்பொழுதுதான் புரிந்து கொள்வார்களோ?

உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இப்பொழுது போர் நடந்து கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை இருக்கிறது. தண்ணீர் இல்லை; உணவு இல்லை; உயிருக்குப் பாதுகாப்பு இல்லை; உடைமைகளுக்குப் பாதுகாப்பில்லை. எனவே, சொந்த வீட்டை விட்டு, நாட்டை விட்டு வெளியேறும் அவலநிலை வந்திருக்கிறது. இந்த நிலையிலும் கூட கருப்பு - வெள்ளை, இன-நிற வேறுபாடு பார்த்து ஆசிய மக்களான இந்திய - தென்னிந்தியாவைச் சார்ந்த கேரளா மாணவியையும், கைக்குழந்தையுடன் மிகவும் இன்னல் பட்டுக் கொண்டிருந்த ../

அந்த கருப்பின பெண்மணிக்கும் ரயிலில் இடம் கொடுக்காமல் கீழே உட்கார வைத்து அவர்களை இடித்துத் தள்ளிய இந்த செயல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இனவெறியும் நிறவெறியும் மேற்கத்திய வெள்ளை இன மக்களுக்கு போர்க்களத்திலும் கூடப் போகாதா? மரணத்தில் கூட மறையாதா? என்ற கேள்வியே எழுகிறது. இதை இந்திய அரசு முழுமையாக விசாரித்து உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.