ஆஸ்திரேலியா : கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் நேற்று இரவு நடந்த ஒரு விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 46. ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரின் இந்த மரணம் கிரிக்கெட் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆண்ட்ரு சைமண்ட்ஸ் இரண்டுமுறை உலக கோப்பையை வென்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றெடுத்திருந்தார். ஆஸ்திரேலிய ரசிகர்களால் கடவுளாக கொண்டாடப்பட்டார். ஆண்ட்ரு சைமண்ட்ஸ் ஒரு திறமையான ஆல்ரவுண்டர் என பலமுறை நிரூபித்துள்ளார். கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றபிறகு பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தில் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் வசிக்கும் டவுன்ஸ்வில்லில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் சாலையில் ஆலிஸ் ரிவர் பகுதியில் இரவு 11 மணியளவில் காரில் சென்றுகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டது. அதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மிதந்தார்.
தகவலறிந்த போலீசார் ஆம்புலன்ஸுடன் விரைந்து வந்தனர். அவரை காயங்களுடன் மீட்ட மருத்துவக்குழுவினர் முதலுதவி அளிக்க முற்படுகையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடயவியல் போலீசார் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் ஏதேனும் கொலைமுயற்சியா என்ற சந்தேக கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்ட்ரு சைமண்ட்ஸின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " ஆண்ட்ரு சைமண்ட்ஸ் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறிய அனுதாபங்களை ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரத்தில் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சக வீரரான ஷேன் வார்ன் சமீபத்தில் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.