24 special

அமர் பிரசாத் ரெட்டி சொன்னதை உண்மை என நிரூபித்த காயத்ரி ரகுராம்; டென்க்ஷனில் பாஜக..!

Amar prasad reddy ,annamalai
Amar prasad reddy ,annamalai

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கட்சிக்கு எதிரான கொள்கை கொண்ட சேனல்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருவது குறித்து அமர் பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டி இருந்த நிலையில், தற்போது அதனை உண்மை என நிரூபிக்கும் விதத்தில் காயத்ரி ரகுராம் செய்து வருகிறார் 


கடந்த வாரம் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி இடையிலான ஆடியோ வெளியே புயலைக் கிளப்பியது. சோசியல் மீடியாவில் வைரலான அந்த வீடியோவில் பெண் நிர்வாகி டெய்சியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யா மீது கண்டனங்கள் குவிந்தன. இதுகுறித்து உடனடியாக விசாரணை கமிட்டி அமைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதன் பின்னர் திருச்சி சூர்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும் அறிவித்தார். 

இதனிடையே திருச்சி சூர்யா விவகாரத்திற்கு முன்னதாக பாஜக பெண் நிர்வாகியான காயத்ரி ரகுராமை தற்காலிகமாக 6 மாதத்திற்கு கட்சியை விட்டு நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. தொண்டர்களிடையே நீடித்து வந்த குழப்பத்திற்கு கடந்த வாரம் பிரபல சேனலுக்குப் பேட்டியளித்த தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டி சரியான விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்போது பேசிய அவர் தொடர்ந்து காயத்ரி ரகுராம் பாஜகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததாகவும், நீண்ட காலமாக இதை தொடர்ந்து செய்து வந்ததால் தான் தற்காலிகமாக நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் சபரீசன் உடனான சந்திப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் விளக்கம் அளித்திருக்கலாம் என கேள்வி எழுப்பிய அவர், தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக செயல்படக்கூடிய சேனல்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களுக்கு காயத்ரி ரகுராம் பேட்டி அளித்து வருவது தவறான செயல் என சுட்டிக்காட்டியிருந்தார். இப்படி கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை பாயும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளதை தெரிவித்த அவர், பாஜகவிற்கு என சில கொள்கைகள், விதிமுறைகள் உள்ளன. அதை மீறிவோர் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

அமர் பிரசாத் ரெட்டி சொன்னதை உண்மை என நிரூபிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் இடது சாரி தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ள புரோமோஷன் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நெறியாளர், பாஜக குறித்தும், அண்ணாமலை குறித்தும் எழுப்பியுள்ள சர்ச்சை கேள்விகளுக்கு காயத்ரி ரகுராம் அளித்துள்ள பதில்களும், ரியாக்‌ஷன்களும் பாஜக தொண்டர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. 

உதாரணமாக, அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு யாரையும் பேச அனுமதிப்பதில்லையா, அதனை மீறி பேசினால் உங்க நிலைமை தான் இல்லையா? என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே சம்மதிப்பது போல் அமைதியாக உள்ளார். இதேபோல் பாஜக சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு காயத்ரி ரகுராம் கொடுத்துள்ள ரியாக்‌ஷன்கள் கட்சியின் உண்மை தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனையடுத்து சோசியல் மீடியாவில் தொண்டர்கள் பலரும் காயத்ரி ரகுராம் ஏன் இப்படி செய்கிறார் என் கேள்வி எழுப்பி வருகின்றனர்.