24 special

இதை நம்பித்தான் இருக்கேன் - அதிகாரிகளுக்கு பறந்த முதல்வர் உத்தரவு

Mkstalin
Mkstalin

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் என்பது திமுக தனது வாக்குறுதியாக பலவற்றை முன் வைத்தது அதன் அடிப்படையிலேயே அந்த தேர்தலில் திமுக பத்து ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது என்று கூறப்பட்டாலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்றாவது வருடத்தில் திமுக காலடி எடுத்து வைத்து அதன் சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் வாக்குறுதியில் பாதியை கூட அவர்கள் நிறைவேற்ற வில்லை என்ற அதிருப்தி பொது மக்களிடையே இருப்பது வெளிப்படையாக செய்திகளில் வெளிவந்துள்ளது. 


இந்த நிலையில் குடும்ப தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்புகள் வெளிவந்து அதற்கான விண்ணப்பங்களும் தற்போது ரேஷன் கடை வாயிலாக வழங்கப்பட்டு முன்பதிவுகளும் பதியப்பட்டு வருகிறது. இருப்பினும் வாக்குறுதியின் பொழுது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்த திமுக தற்போது பல காரணங்களை கூறி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்று பல வழிமுறைகளை வரையறுத்துள்ளது. 

ஒரு குடும்பம் கூட்டு குடும்பமாக இருந்தால் இரண்டு மூன்று ரேஷன் கார்டுகள் இருந்தாலும் அதில் ஒரே ஒரு குடும்பத் தலைவிக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், அரசு பணியில் பணிபுரிவோர், ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து உதவித்தொகையை பெறுவோர், ஒரு குடும்பத்தில் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், வருமான வரி கட்டுபவராக இருப்பவருக்கு, ஒரு குடும்பத்தில் கனரக வாகனங்கள் வைத்திருப்பவருக்கு, நன்செய் அல்லது புன்செய் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு, 3000 யூனிட்டுக்கு மேல் மின்சார உபயோகப்படுத்துபவருக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசால் கூறப்பட்டுள்ளது. 

இப்படி வகுக்கப்பட்ட வரைமுறையாலே  திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த திட்டத்தை பெரிதும் நம்பி இருப்பதாகவும் அதனால் இதனை திறம்பட செய்ய வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுக்கு பல அறிவுரைகளையும் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதாவது தகுதி உடைய குடும்ப தலைவிகளுக்கு கட்டாயம் இந்த பணம் செல்ல வேண்டும், ஒரு கோடி என்ற இலக்கை மறந்து விடக்கூடாது, விண்ணப்பித்த பெண்கள் கூறப்பட்டிருந்த வரைமுறைக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு முறையான விளக்கம் கொடுக்க வேண்டும், பெறப்படும் வங்கி கணக்குகள் சரியாக உள்ளதா என்பதையும் அதில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் எவரையும் அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கக் கூடாது, ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்டால் அதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்று இந்த திட்டத்தில் மேல்பார்வையிடம் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சீக்ரட்டாக பல அறிவுரைகளை வழங்கி உள்ளார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியை விசாரிக்கும் பொழுது இது மட்டும் தான் நம்மிடம் இருக்கும் துருப்புச்சீட்டு இதை விட்டுவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட நமக்கு வராமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது, எனவே இந்த திட்டத்தையாவது மக்கள் மத்தியில் ஒழுங்காக கொண்டு சேர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல் அமைச்சர்களுக்கும் உத்தரவு பறந்துள்ளதாக அறிவாலய தரப்பு தகவல்கள் கசிகின்றன.