திருச்சி சிவாவின் வீடு தாக்கப்படும் போது நான் அந்த இடத்தில் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக பணிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் திருச்சி சிவா வீட்டிற்கு அருகே எஸ்பிஐ காலனியில், பேட்மிண்டன் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் திமுக எம்பி சிவாவின் பெயரை குறிப்பிடாமலும், அவரை முறையாக அழைக்காமலும் இருந்த அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக, சிவாவின் ஆதரவாளர்கள் கருப்பு கோடி ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கே.என்.நேருவின் ஆதரவாளர்களுக்கும், திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து விழாவிற்கே வந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாத நேருவின் ஆதரவாளர்கள், ஆத்திரத்தில் சிவாவின் வீட்டிற்கே சென்று அவரது வீட்டையும், கார் கண்ணாடியையும் காவல்துறை முன்னிலையிலே கடுமையாக தாக்கி சேதப்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் ஆளும் கட்சி திமுக மேலிடத்திலும், பொதுமக்களிடத்திலும் பேசுபொருளான நிலையில், கே.என்.நேரு மற்றும் திருச்சி சிவா இருவருமே அந்த விவகாரம் குறித்து எந்தவித பதிலும் பொதுவெளியிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவிக்காமலே இருந்துவந்தனர். ஆனால் தற்போது இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி திருச்சி சிவாவை அவருடைய வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து சமரசம் பேசியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
பேச்சுவார்த்தைக்கு பின் இருவரும் ஒன்றாகவே வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “ பொதுவாக என்னுடைய தொகுதியில் எங்கு என்ன நிகழ்ச்சி நடப்பது என்பதை எல்லாம் மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும், மேயரும், சட்டமன்ற உறுப்பினர்களும் தான் கூறுவார்கள், அதன்படி நான் நிகழ்ச்சிக்கு சென்று பங்குகொள்வது தான் வழக்கம். மற்றபடி அந்த நிகழ்ச்சிகள் எங்கே? எந்த இடத்தில்? நடக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் எனக்கு தெரியாது.
அந்தவகையில் தான் ராஜா நகரில் உள்ள எஸ்பிஐ காலனியில், பேட்மிண்டன் அரங்கம் திறப்பு விழாவிற்கு சென்றேன். அங்கு கருப்புக்கொடி பிடித்து வந்த சிலபேர் எதற்காக எங்கள் அண்ணன் சிவாவின் பெயரை சேர்க்காமலும், அவரை அழைக்காமலும் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னை ஏனப்பா கேட்கிறீர்கள், விழாவை ஏற்பாடு செய்தவர்களை தானே கேட்க வேண்டும் என பதில் கூறிவிட்டு சென்றுவிட்டதாக கூறினார்
அதற்கு பிறகும் அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றுவதற்காக காவல்துறையினர் வண்டியை நிறுத்தியிருக்க, அதற்கு பின்னாக என் வண்டி இருந்ததால், நான் பிரச்சனை முடிந்துவிட்டது என்று அடுத்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக சென்றுவிட்டேன். ஆனால் அதற்கு பிறகு கழகக் குடும்பத்தில் நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது.
நான் வேறோரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கும் போது தான், எனக்கு போன்கால் வந்தது, இதைபோல பிரச்சனை ஆகிவிட்டது, காவல் நிலையத்தில் வழக்கு போட அழைத்து சென்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அப்போதும் நான் சிவா வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டேன். மேலும் கம்யூனிகேஷன் கேப் இருந்ததால் தான் நடந்துவிட்டது, மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் கே.என்.நேரு.
இதுதொடர்பாக முதலமைச்சர் கூட கேட்டார்கள், அப்போது கூட நான் சொன்னேன், நான் போய் இப்படி செய்வனா அண்ணா என்று கூறினேன். திமுகவில் சிவா ஒரு மூத்த தலைவர்.பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பவருக்கு அவமதிப்பு ஏற்படுத்தி உள்ளது, கழகத்திற்கு நல்லதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். நான் சிவா வீட்டிற்கு சென்று அவரை சமாதனப்படுத்தி வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசினோம். இனிவரும் காலங்களில் இதுபோன்று தவறுகள் நடக்காது என்று அவரிடம் கூறியுள்ளதாக கே.என்.நேரு தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லதாக இருக்கட்டும்... என்ற தலைவரின் குரல் எங்களுடைய செவிகளில் ஒலித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.ஒருவழியாக கட்சியின் மேலிடத்தின் நிர்பந்தத்தால் திருச்சி சிவா மற்றும் கே.என்.நேரு தரப்பினர்கள் சமரசம் செய்து கொண்டாலும், இவர்கள் இருவருக்குள்ளும் தனியாமல் கொழுந்துவிட்டுக்கொண்டே இருக்கும் மோதல் போக்கானது, நிச்சயம் கட்சியின் உட்பூசலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.