2024 நாடாளுமன்ற தேர்தலை திராவிட கூட்டணி கட்சிகளுடன், பாஜக எதிர்க்கொள்ள வேண்டாம் என்று தன்னுடைய நிலைபாட்டை தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் பதவி விலகி, அவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தார். மேலும் அவரை தொடர்ந்து பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலர் அதிமுகவில் இணைந்தனர்.இதனால் பாஜக மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையே உரசல் ஏற்பட்டது. பின்பு அது கலவரமாக வெடித்து, பாஜக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எறித்து அவர்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக கட்சியின் தொண்டர்கள் சிலர் அண்ணாமலையின் உருவ படத்தை எரித்தனர். இதுகுறித்து இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துவந்த நிலையில், பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு வந்து புதியதாக கட்டப்பட்ட பாஜக கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்து, தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஜே.பி.நட்டாவின் ஆலோசனைக்கு பிறகு அதிமுக, பாஜக இடையே கூட்டணி தொடரும் என்று பாஜகவினரும், அதிமுகவின் முன்னால் அமைச்சர் ஜெயகுமார் போன்ற தலைவர்களும் கூறினார்கள். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளவதாக அறிவித்தார்கள். இது நடந்து சில நாட்களே ஆன நிலையில், தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திராவிட கட்சிகளின் கூட்டணி வேண்டாம் என்று பரபரப்பை ஏற்றபடுத்தி உள்ளார்.
சென்னை அமைந்தகரையில் நடந்த பாஜக கூட்டத்தில் தலைமை தாங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும், குறிப்பாக கட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு மாநில நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அப்போது தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை நாம் வலுவாக எதிர்கொள்ள முடியும்.
மேலும் திராவிட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நான் விரும்பவில்லை. பாஜக கட்சியின் வளர்ச்சி என்பது தொண்டர்களினால் கட்டமைக்க பட்டிருக்கிறது. நம்முடைய முடிவுகளை நாமே அறிவிப்போம், நம்முடைய முடிவுகளை நாமே எடுப்போம் என்று தெரிவித்தார். மேலும் மே மாதத்தில் கூட்டணி கட்சிகளுடைய முடிவை நான் கண்டிப்பாக எடுப்பேன். அந்த முடிவை மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நான் கண்டிப்பாக அறிவிப்பேன் என்றார்.
கடந்து சில ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும் போது, யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்லும் அவசியம் கிடையாது. வரும் காலங்களில் பாஜக திராவிட கூட்டணி கட்சியுடன் சேராமல் தனித்து போட்டியிட வேண்டும். அதுவே என் நிலைப்பாடு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேர்தல் தொடர்பாக பேசி முடிவு எடுக்கும் நேரம் இது கிடையாது.மேலும் மாநில மையக்குழு கூட்டத்தில் தான் இந்த நிலைப்பாட்டை பற்றி அண்ணாமலை பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.