Tamilnadu

நிச்சயம் சட்ட போராட்டத்தை தொடர்வேன் பாமக பாலு !

pmk balu
pmk balu

பாமகவை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பாலு, இறந்தவர் உடலை அடக்கம் செய்ய தண்ணீருக்குள் நடந்து செல்லும் அவல நிலையை போக்க நிச்சயம் சட்ட போராட்டம் தொடருவேன் என தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் மழைக்காலங்களில் காலம் காலமாக இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் தூக்கி செல்லும் அவல நிலை. அந்த மக்களுக்காக நீதியைப் பெற்றுத்தர சட்டப் போராட்டத்தை தொடருவேன்.! 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மழை காலங்களில் உடையார் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மழை நீரானது வடிகால் ஓடை வழியாகவும், காட்டு பகுதிகளின் வழியாகவும் இந்த ஏரியில் கலக்கிறது. இதனால் மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி, இதில் உள்ள வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. 

இந்த ஏரியின் கரையில் உள்ள இடுகாடு செல்வதற்கு, ஏரியின் கரையை பயன்படுத்தி காலம் காலமாக இறந்தவரின் உடலை எடுத்து சென்று வருகின்றனர். இதுகுறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் சென்ற ஆண்டு இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீர் எடுத்து சென்றனர். தற்போதும் பெய்து வரும் கனமழையில் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றுள்ளனர். இது பெரும் வேதனைக்குரியது. இறந்தவரின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்வது நம் அடிப்படை உரிமையாக அரசியல் சாசனம் சொல்கிறது. ஆனால் தமிழக அரசு இப்பகுதி மக்களின் கோரிக்கையை இதுவரை பரிசீலிக்க வில்லை.

அப்பகுதி மக்கள் ஒவ்வொரு முறையும் துன்பப்படும் போது, அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, சரி செய்து தருவதாக கூறி செல்கின்றனர். ஆனால் தற்போது வரை அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அரசின் அலட்சிய போக்கால் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் இப்பகுதி மக்கள் மத்தியில் அடுத்த மரணம் நிகழ்வதுக்குள்ளாக அங்கு பாலம் கட்டி முடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சட்டப் போராட்டத்தை தொடர்வேன். இவ்வாறு  அவர் குறிப்பிட்டுள்ளார்.