காஷ்மீர் : இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் இருந்தாலும் முந்தைய ஆட்சியின் தவறுகளால் அந்த மாநிலம் தனித்தே நின்றது. அதன் பொருளாதார நிலையிலோ அல்லது மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலோ எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர்களது வாழ்வு ஆப்பிள் மரங்களையும் சுற்றுலாவையுமே நம்பியிருந்தது.
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆனபின்னரும் சாலை வசதிகளோ மின்சார வசதிகளோ மாநிலத்தில் பல இடங்களில் எட்டாக்கனியாக இருந்த நிலையில் 2014 ஆட்சிமாற்றம் மற்றும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள் சாலைகள் என ஜம்மு மாநிலம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முதல் காற்றாடி ஆலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமான வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்குப்பகுதியில் பசுமை ஆற்றலை உருவாக்க கரியமில வாயுவின் தடத்தை குறைக்கவும் இந்திய ராணுவம் முதல் காற்றாலையை நிறுவியுள்ளது.
இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவிவரும் மின்சாரப்பற்றாக்குறையை போக்கும் முதற்கட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இது மாநில மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுலாத்தலமான குரேஸ் முழுவதுமே டீசல் ஜெனரேட்டர்களை சார்ந்துள்ளது. தற்போது நிறுவப்பட்டுள்ள காற்றாலையால் அதன் தேவைகள் பூர்த்தியாகும் என கருதப்படுகிறது.
இந்திய ராணுவத்தால் நிறுவப்பட்ட இந்த காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரம் தோராயமாக 3000w என கணக்கிடப்பட்டுள்ளது. 5KVA டீசல் ஜெனரேட்டரின் செலவு ஆண்டுக்கு 5,45,000 ரூபாயாகும். ஆனால் காற்றாலை மூலம் ஆகும் செலவு ஆண்டுக்கு 11000 மட்டுமே. இந்த காற்றாலையால் தூய்மையான சூழல் உருவாவது மட்டுமன்றி மிக குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் கனவுகளில் ஒன்றான தடையில்லா மின்சாரம் எனும் முழக்கத்தை இந்திய ராணுவத்தின் மூலம் மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதாக காஷ்மீர் மாநில பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.