சமீபத்தில் நடந்து முடிந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக அதிக புது முகங்களை இறக்கியது. பல மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்த போதிலும் தனது கட்சியின் புதுமுகங்களை தேர்தலில் இறக்குவதை என்றும் தவறாமல் செய்து வருகின்ற பாஜக கடந்த தேர்தலிலும் அந்த முயற்சியை மேற்கொண்டு பல வெற்றிகளை பெற்றது. அந்த வகையில் மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் என்பவரும் அடங்குவார். இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு வெளியுறவு துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகள் ஆவார். அதுமட்டுமின்றி சுஷ்மா சுவராஜ் இந்தியாவில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட அரசியல்வாதி என அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வால் ஸ்டிரீட் சுஷ்மா சுவராஜுக்கு புகழாரம் சூட்டியது.
அப்படிப்பட்ட பிரபலமான ஒரு அரசியல்வாதியான மகள் பன்சூரி சட்ட வல்லுனராக அறியப்பட்டவர். மேலும் ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பன்சூரி டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். மேலும் இவர் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 2007 ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த பன்சூரி 2019 ஆம் ஆண்டு புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது தாயை இழந்தார். இருப்பினும் வழக்கறிஞர் தொழிலில் 16 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பன்சூரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராகவும் அறியப்பட்டார். அதாவது சிவில் கிரிமினல் வணிகம் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளை கையாளுவதில் பன்சூரி துல்லியமான சட்ட நுணுக்கங்களைக் கொண்டவர் என பலராலும் கூறப்பட்டது.
இதனை அடுத்து 2023 டெல்லியில் பாஜகவின் சட்டப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பன்சூரி தனது அரசியல் பயணத்தில் வேகம் எடுக்க ஆரம்பித்தார்.ஏனென்றால் டெல்லியில் ஆட்சி அமைத்திருந்த அரவிந்த் கெஜ்ரவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தை கடுமையான விமர்சனங்களால் ஆட்டம் காண வைத்து வந்தார். இதனால் டெல்லி அரசியல் முழுவதும் கவனம் பெற்றார் பன்சூரி சுவராஜ். அதே சமயத்தில் அரசியலில் நிகழ்ந்து வந்த பல ஊழல்களையும் வெளிப்படையாக மக்கள் மத்தியில் எடுத்து வைத்த பன்சூரிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. மேலும் மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு மத்திய அரசின் மீது பல கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் பன்சுரி வாதாடியதும், உச்சநீதிமன்றத்தால் ஜனநாயகத்தின் படுகொலை என கடுமையாக விமர்சிக்கப்பட்ட சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்திலும் பாஜகவிற்கு ஆதரவாக சட்டரீதியில் துணை நின்று உண்மையை வெளிக்கொண்டு வந்தார் பன்சூரி, இப்படி சட்ட ரீதியான பல விவகாரமான சர்ச்சைகளுக்கு தனது வாதத்தால் நீதிமன்றங்களுக்கு உண்மையை எடுத்து முன்வைத்த மன்சூரி மக்கள் மத்தியிலும் செல்வாக்கை கண்டதால் 2024 லோக்சபா தேர்தலில் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் தனது நிலைப்பாட்டையும் பாஜக மக்களுக்கு செய்ய உள்ள நலத்திட்டங்களையும் நேரடியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து தனது முதல் தேர்தலிலேயே சோம்நாத் பார்தியை 78,370 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவை உறுப்பினராக பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 24 ஆம் தேதி அன்று மக்களவையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு தனது பொறுப்பில் அமர்ந்த பன்சூரி தனது பதவி பிரமாணத்தையே சமஸ்கிருதத்தில் எடுத்து ஒட்டுமொத்த மக்களவையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இந்தியா முழுவதும் மக்களிடையே அதிக கவனம் பெற்ற அரசியல்வாதியின் மகள் என்பதை நிரூபித்து தனது பொறுப்பை ஏற்றுள்ளார் பன்சூரி சுவராஜ். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது.